சென்னை: மக்கள் பிரச்சினை எவ்வளவோ உள்ளது. எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கையில் திமுக ஈடுபடுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.
கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் வேலுமணிக்கு சொந்தமான 53 இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது.
எஸ் பி வேலுமணி , அவரது நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வேலுமணியிடமும் சென்னை எம்எல்ஏ விடுதியில் 4 மணி நேரமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையடுத்து எம்எல்ஏ விடுதி முன்பு எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் குவிந்துள்ளனர். அவர்கள் தங்களை உள்ளே அனுப்புமாறு காவல் துறையினரிடம் வாக்குவாதம் நடத்தி வருகிறார்கள்.
இந்த ரெய்டு குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் ஆளுங்கட்சி என்கிற மமதையில் திமுக செயல்பட்டு வருகிறது. 2016-18 காலக்கட்டத்தில் அளிக்கப்பட்ட புகாரில் ரெய்டு என்கிறார்கள். சட்டம் உள்ளது, நீதிமன்றம் உள்ளது. அதில் நாங்கள் நிரபராதி என்பதை நிரூபிப்போம். நாட்டில் எவ்வளவோ மக்கள் பிரச்சினை உள்ளபோது எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். நீதிமன்றம் உள்ளது அங்கு வழக்கு தொடரலாமே அதை விடுத்து ரெய்டு செய்து ஒரு அவமான பிரச்சினையை உருவாக்கலாமா? களங்கப்படுத்த முயற்சிக்கலாமா? காவல்துறை உள்ளது. அது விசாரணை நடத்தட்டும் என்றார்.