சென்னை: சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரியத்தின் குடியிருப்புகள் மோசமான நிலையில் உள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, ஐஐடி குழுவினர் இன்று அதனை ஆய்வு செய்தனர்.
சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் தமிழக அரசால் ஏற்கனவே கட்டித் தரப்பட்ட வீடுகள் பழுதடைந்திருந்தன. இதனால் அந்த வீடுகளை இடித்துவிட்டு புதியதாகக் குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டது.
கடந்த 2018 முதல் 2021 வரை இரண்டு கட்டங்களாக சுமார் 250 கோடி ரூபாய் செலவில் 1900 வீடுகள் கட்டப்பட்டது. இடையில் கொரோனா பரவல் ஏற்பட கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வார்டாகவும் இந்தக் கட்டிடங்கள் செயல்பட்டது.
தொட்டால் உதிரும் கட்டிடங்கள்
அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இந்த குடியிருப்பின் வீடுகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன. கட்டப்பட்டு சில ஆண்டுகளிலேயே மிக மோசமான நிலைக்கு இந்த கட்டிடம் சென்றுவிட்டது. வீடுகள் தரமற்ற முறையில் கட்டுப்பட்டுள்ளதாக அங்குக் குடியேறியவர்கள் தொடர்ந்து புகார் அளித்தனர். அங்குள்ள சுவர், பகுதிகள் தொட்டாலே உதிரக்கூடிய நிலையில் இருந்தது. இது குறித்த செய்திகள் கடந்த வாரம் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கவன ஈர்ப்பு தீர்மானம்
இந்த விஷயம் பூதாகரமானதைத் தொடர்ந்து குடிசை மாற்று வாரிய துறை அமைச்சர் தா.மோ. அன்பரன் நேரடியாகப் புளியந்தோப்பு கே.பி.பார்க் குடிசை மாற்றுவாரியக் குடியிருப்பிற்குச் சென்று ஆய்வு நடத்தினார். இது தொடர்பாகத் தமிழ்நாடு சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையிலேயே அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதியளித்தார்.
தலைவர்கள் வலியுறுத்தல்
இந்த விவகாரத்தில் குடிசை மாற்று வாரிய பொறியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து கே.பி.பார்க் குடிசை மாற்றுவாரியக் குடியிருப்பின் சுவர்களில் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது. சுவர்களின் வெளிப் பூச்சை சரி செய்தால் மட்டும் பற்றாது என்றும் கட்டிடத்தின் உறுதித்தன்மையை வல்லுநர் குழுவைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கட்டிடத்தின் தரத்தை அறிய ஆய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
ஐஐடி நிபுணர் குழு ஆய்வு
அதைத் தொடர்ந்து குடியிருப்பை ஆய்வு செய்ய ஐஐடி நிபுணர் குழுவிற்குத் தமிழக அரசு பரிந்துரை அளித்திருந்தது. தலைமை செயல் பொறியாளர் பத்மநாபன் தலைமையில் 11 பேர் கொண்ட ஐஐடி குழுவினர் பொருட்களின் தரம், வீடுகளின் அமைப்பு ஆகியவை குறித்து ஆய்வு செய்தனர். கட்டிடத்தின் தரம் குறித்த விரிவான அறிக்கை 3 வாரங்களில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என ஐஐடி குழுவினர் தெரிவித்தனர்.