சென்னை: தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தூத்துக்குடி நகரப் பகுதியை தவிர்த்து விட்டு பார்த்தால், அத்தனையுமே “தொழில் மறைவு பிரதேசங்களாக” உள்ளன.
தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியும் இல்லை, வேளாண்மையும் இல்லை. இதனால் கூட்டம் கூட்டமாக குடும்பங்கள் வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் இடம் பெயர்ந்துவிட்டன. இதனால், தென் மாவட்டங்கள் முதியோர் மட்டும் வாழும், முதியோர் இல்லங்கள் போல காட்சியளிக்கின்றன.
தூத்துக்குடிக்கு வருகிறது ரீஃபைனரி தொழிற்சாலை
இந்த நிலையில்தான், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இன்று அளித்துள்ள பேட்டியில், கூறியதாவது: தூத்துக்குடி-மதுரை வழித்தடத்தை தொழில் வழித்தடமாக மாற்றி, புதிய தொழிற்சாலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளோம். தென் மாவட்டங்களிலேயே, தூத்துக்குடிதான், தொழில் மையமாக இருக்கிறது. எனவே தூத்துக்குடியில் புதிதாக ஒரு பெரிய ரீஃபைனரி தொழிற்சாலை வருவதற்கான பேச்சுவார்த்தை தொடக்க நிலையில் இருக்கிறது.
பர்னிச்சர் பார்க், டெக்ஸ்டைல் பூங்கா
தூத்துக்குடியில் “பர்னிச்சர் பார்க்” உருவாக்குவதற்கு முயற்சிகள் நடக்கின்றன. இதற்காக சிப்காட் வளாகத்தில் இடம் ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்க இருக்கின்றன. ஃபர்னிச்சர் பார்க் வரும்போது மிகப்பெரிய அளவுக்கு உள்ளூரில் தொழில் வளர்ச்சி ஏற்படும். இதேபோல, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் டெக்ஸ்டைல் பூங்கா அமைப்பதற்கான திட்டம் எங்களிடம் இருக்கிறது.
தொழில் காரிடார் திட்டம்
தூத்துக்குடி துறைமுகத்தை தரம் உயர்த்துவது, சிப்காட் வளாகத்தில் இருந்து கடல் நீரை குடிநீராக மாற்றக்கூடிய வசதிகளை ஏற்படுத்துவது, அதற்கான இயந்திரத்தை பொருத்தும் திட்டமும் எங்களிடம் இருக்கிறது. தென் மாவட்டங்களில் தொழில் முன்னேற்றத்தை உருவாக்க வேண்டும், குறிப்பாக, தூத்துக்குடி மற்றும் மதுரைக்கு இடைப்பட்ட தொழில் காரிடார் பகுதியை மேம்படுத்த வேண்டும் என்று தொழில்துறை அமைச்சகம் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. புதிய தொழிற்சாலைகள் அமைந்தால் தென்மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தென் மாவட்ட மக்களின் நிலைமை
தென் மாவட்ட மக்கள் தமிழ் நாட்டுக்குள்ளேயே புலம்பெயர் மக்களாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள், சென்னை, கோவை உள்ளிட்ட பிற மண்டலங்களில் உள்ள நகரங்களுக்கு அவர்கள் இடம்பெயர வேண்டி இருப்பதால் ஆண்டுக்கு ஒருமுறை, கோவில் கொடை மற்றும் திருவிழா காலங்களில் மட்டும் சொந்த ஊருக்கு வந்துவிட்டு ஏக்கத்தோடு பிற ஊர்களுக்கு பணியாற்ற செல்லும் நிலைமையில் இருக்கிறார்கள் என்று சில தினங்களுக்கு முன்பு “ஒன்இந்தியா தமிழில்” கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
திமுகவுக்கு சாதனை
இந்த நிலையில்தான், இன்று தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த தகவல்களை தெரிவித்து இருக்கிறார். தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி என்பது பூஜ்ஜியம் என்ற நிலையிலிருந்து தொடங்கப்பட வேண்டி இருக்கிறது. எனவே அடுத்தடுத்த நாட்களிலேயே தொழிற்சாலைகள் வந்துவிடாது என்ற போதிலும், அதற்கான முயற்சிகளை தொடர்ந்து எடுத்தால், திமுக ஆட்சி காலத்தின் சாதனைகளில் அது பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட சாதனையாக மாறும் என்பதில் சந்தேகம் கிடையாது. தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் எம்பியாக திமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான கனிமொழி இருக்கிறார். எனவே அந்த மாவட்டத்தில் அதிகப்படியான தொழில் வளர்ச்சியைக் கொண்டு வர அவரும் முயற்சி செய்வார். ஏற்கனவே அதற்கான முயற்சிகளைத் தொடங்கி இருப்பார் என்ற நம்பிக்கையில் மக்கள் இருக்கிறார்கள்.