சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய்-க்கு கடத்த இருந்த 5 கோடி ரூபாய் மதிப்பிலான வைர கற்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் இருந்து துபாய்க்கு செல்லும் விமானம் இ.கே.543 புறப்பட இருந்த நிலையில், அதில் வைரம் கடத்தப்படுவது குறித்து சுங்கத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சோ்ந்த 30 வயது ஆண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை தடுத்து விசாரித்தனா். அதோடு அவருடைய சூட்கேஸ், பைகளை சோதனையிட்டனா். அதில் டெலஸ்கோப்கள் 4 வைத்திருந்தாா். அந்த டெலஸ்கோப்புகளின் கைப்பிடிகளுக்குள் 22 சிறிய பிளாஸ்டிக் பைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
அந்த பிளாஸ்டிக் பைகளில் பட்டை தீட்டப்பட்டு மெருகூட்டப்பட்ட வைரக்கற்கள் இருந்ததை கண்டுப்பிடித்தனா். மொத்தம் 1052 காரட் வைரக்கற்கள் இருந்தன. அவைகளின் மதிப்பு ரூ.5.76 கோடி.இதையடுத்து சுங்கத்துறையினர் அந்த பயணியிடமிருந்த வைரக்கற்களை பறிமுதல் செய்தனா். அதோடு அவரின் பயணத்தை ரத்து செய்து, வைரம் கடத்திய பயணியை கைது செய்து மேலும் விசாரணை நடத்தினர்.ஆப்ரிக்கா நாடுகளில் கிடைக்கும் பட்டை தீட்டப்படாத வைரக்கற்களை இந்தியாவிற்கு கடத்தி வந்து,இங்கு பட்டை தீட்டி பாலீஸ் போட்டு,மெருகூட்டி மீண்டும் வெளிநாட்டிற்கு கடத்த முயன்றபோது பிடிப்பட்டுள்ளதாக தெரியவந்தது.