சென்னை: தமிழக காங்கிரசில் தலைவரை மாற்ற வேண்டும் என்கிற கோஷம் மீண்டும் துவங்கியிருக்கிறது. காங்கிரசில் இத்தகைய கோஷம் இல்லையென்றால்தானே ஆச்சரியம்.அப்படி என்ன நடக்கிறது, கட்சிக்குள் என்று கதர் வட்டாரத்தில் காது கொடுத்து கேட்டோம். அப்போது உள்ளே நடக்கும் பல உள்குத்துகள், அதிரடி போட்டிகள் குறித்து சுவாரசிய தகவல்கள் வெளி வந்தன.
கே.எஸ்.அழகிரி பதவிக்கு ஆபத்து
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே, கே.எஸ்.அழகிரியை தலைவர் பதிவியலிருந்து மாற்ற வேண்டும் எனவும், மீண்டும் தனக்கு தலைவர் பதவி வேண்டும் எனவும் ராகுல்காந்தியை சந்தித்து முயற்சித்தார் திருநாவுக்கரசு எம்.பி. ! ராகுல்காந்திக்கும் அந்த எண்ணம் இருந்தது. அதற்கு பல காரணங்கள் உண்டு.
தேர்தல் முடிவுக்கு காத்திருப்பு
அதேநேரம், திமுக தரப்பிலிருந்து கொடுத்த தகவலும், சோனியா மற்றும் ராகுலுக்கு அருகிலிருக்கும் திருவுக்கு எதிரானவர்கள் கொடுத்த அழுத்தமும் ராகுல் தனது முடிவை மாற்றிக்கொள்ள காரணமாக மாறியது. இனால் விரக்தியடைந்த திருநாவுக்கரசு, ‘தேர்தல் முடிவுகள் வரட்டும் ; அந்த முடிவுகளே தலைவரை மாற்ற வேண்டிய நிர்பந்தத்தை உருவாக்கும் ; அப்போது பந்து நம் கைக்கு வரும்’ என “நம்பிக்கையுடன்” காத்திருந்தார்.
காங்கிரஸ் நல்ல வெற்றி
ஆனால், 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 18 இடங்களில் வெற்றிப் பெற்றது. திமுக கூட்டணியில் அதிக ஸ்ட்ரைக் ரேட் பெற்ற கட்சியாக காங்கிரஸ் மாறியது. அதாவது போட்டியிட்ட தொகுதி மற்றும் வெற்றியிட்ட தொகுதி விகிதாசாரப்படி காங்கிரஸ்தான் அதிக சதவிகித வெற்றியை பதிவு செய்தது. கட்சி தலைமையும் கே.எஸ். அழகிரிக்கு வாழ்த்துக்களை அப்போது தெரிவித்தது. இதனால், தலைவர் மாற்றம் இப்போது இருக்காது என நினைத்து அமைதியானார் திருநாவுக்கரசு.
டெல்லியில் முகாமிட்டுள்ள திருநாவுக்கரசர்
ஆனால், தேர்தல் முடிந்து 2 மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில் மீண்டும் லாபியை ஆரம்பித்து விட்டார். தலைவர் பதவியை பிடிப்பதற்காக டெல்லியில் முகாமிட்டிருக்கிறார் திருநாவுக்கரசு. 4 நாட்களாக முகாமிட்டும் இன்று காலை வரை ராகுலின் அப்பாயிண்மெண்ட் கிடைக்கவில்லை என்பதுதான் இதில் முக்கிய தகவல். ஆனால், ராகுலை சந்தித்துவிட்டுத்தான் டெல்லியிலிருந்து திரும்ப வேண்டும் என்ற முடிவில் காத்திருக்கிறார் திரு!
பீட்டர் அல்போன்ஸ்
இதற்கிடையே, தலைவர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பு மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸுக்கும் உண்டு. அவரும் தனக்குள்ள லாபி மூலம் பல முயற்சிகளை எடுத்தவர். சிவகங்கை சீமையைச் சேர்ந்த ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர் தடையால் அது நிறைவேறாமல் இருந்தது. தற்போது, தமிழ்நாடு சிறுபான்மையினர் நல வாரியத்தின் தலைவராக பீட்டர் அல்ஃபோன்சை திமுக தலைமை நியமித்துள்ளது. இதனை முன்னிறுத்தி தலைவர் பதவியை கைப்பற்ற பீட்டர் தரப்பும் களத்தில் இறங்கியுள்ளது. இதனால், சில மாதங்களாக அமுங்கிக் கிடந்த ‘தலைவரை மாற்றுங்கள்’ கோஷம் மீண்டும் தலைத் தூக்கியுள்ளது.