சென்னை : சென்னை அண்ணாசாலை எல்ஐசி கட்டிடம் அருகே வரிசையாக கார்களை நிறுத்தி சாவிகளை எடுத்து சென்ற கால் டாக்ஸி ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் நடந்த போராட்டம் காரணமாக அண்ணா சாலை ஸ்தம்பித்தது. ஊபர் (UBER) மற்றும் ஓலா (OLA) நிறுவனங்களின் வாடகைக் கார் ஓட்டுநர்கள், அந்நிறுவனங்கள் தங்களிடமிருந்து பெறும் கமிஷன் தொகையை குறைக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
இதேபோல் கால் டாக்ஸி கட்டணங்களை நேரத்திற்கு தகுந்தாற் போல் அரசே நிர்ணயிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகிறார்கள். தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் பகுதியில் அறவழியில் காத்திருப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
ஓட்டுநர்கள் போராட்டம்
ஆனால் தொடர்ந்த அவர்களுக்கு தீர்வு எட்டப்படாத காரணத்தால், திடீரென மாலை நேரத்தில் கார்களை எடுத்துக்கொண்டு போராட்ட களத்தில் இருந்து கிளம்பிய ஓட்டுநர்கள் அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தின் அருகே சாலையில் கார்களை நிறுத்திவிட்டு சாவிகளை எடுத்துக்கொண்டு வெளியே சென்றனர்.
மாலை நேரத்தில் நடந்தது
பின்னர் வாடகை கார் ஓட்டுநர்கள் தங்கள் கோரிக்கைகளை கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. மாலை நேரத்தில் அலுவலகங்களை முடித்துவிட்டு பலரும் வீட்டுக்கு செல்லும் நேரம் என்பதால் போக்குவரத்து நெரிசல் இயல்பாகவே அதிகமாக இருக்கும்.
போராட்டம் ஏன்
வாடகை கார் ஓட்டுநர்கள் திடீரென அண்ணா சாலையில் கார்களை நிறுத்திவிட்டு போராடியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அண்ணாசாலை போக்குவரத்து நெரிசல் காரணமாக ஸ்தம்பத்தது. கால் டாக்ஸி கட்டணங்களை நேரத்திற்கு தகுந்தாற் போல் அரசே நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராடினார்கள்
பரபரப்பு
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வாகனங்களை சாலையின் ஓரங்களில் நிறுத்த வழி வகை செய்தனர். வாடகை கார் ஓட்டுநர்களின் இந்த போராட்டத்தால் சென்னை அண்ணா சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.