திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பேரூராட்சியில் அதிமுக பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு ஆளும் தரப்பிலிருந்து பல்வேறு மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், அவர்கள் தலைக்கவசம் அணிந்த படி பதவி ஏற்க வருகை தந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி மாநகராட்சி அம்பாசமுத்திரம், வி.கே.புரம், களக்காடு ஆகிய 3 நகராட்சிகள் சங்கர்நகர், நாரணம்மாள்புரம், திசையன்விளை, திருக்குறுங்குடி உள்ளிட்ட 17 பேரூராட்சிகளுக்கு கடந்த 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 22ஆம் தேதி எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், திருநெல்வேலி மாநகராட்சி அம்பாசமுத்திரம் வி.கே.புரம் நகராட்சிகள் 15 பேரூராட்சிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பெரும்பான்மை வார்டுகளில் வெற்றி பெற்றது .
இதனால் அந்த உள்ளாட்சி அமைப்புகள் தலைவர்கள் துணைத் தலைவர்கள் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனிடையே திசையன்விளை பேரூராட்சியில் அதிமுக அதிக வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. திருக்குறுங்குடி பேரூராட்சியில் அதிமுக மற்றும் சுயச்சை வேட்பாளர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த இரண்டு பேரூராட்சிகளிலும் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ளது.
திசையன்விளை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ள நிலையில், அதில் 9 வார்டுகளில் அதிமுகவும் ஒரு வார்டில் பாரதிய ஜனதா கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி இரண்டு வார்டுகளும் திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டு வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ள நிலையில், சுயேச்சைகள் 3 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். அதில் இரண்டு கவுன்சிலர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளனர்.
இதனிடையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர்கள் இன்று பேரூராட்சி அலுவலகத்திற்கு பதவியேற்க வந்தனர். அப்போது அவர்கள் 10 பேரும் சொகுசு வாகனத்தில் வந்த நிலையில் பதவியேற்க வரும் போது தலையில் கவசம் அணிந்த படி வந்தனர்.
இதுகுறித்து விசாரித்தபோது, ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து அவர்களுக்கு மிரட்டல் விடுப்பதாகவும் திமுகவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கூறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அதிமுக மாவட்டச் செயலாளர் கணேசராஜா திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து திசையன்விளை பேரூராட்சி அதிமுக மற்றும் பாஜகவில் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மனு அளித்திருந்தார். திமுக பிரமுகர்கள் என கூறிக்கொள்ளும் நபர்கள் அதிமுக மற்றும் பாஜக மக்கள் பிரதிநிதிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டுவதாகவும் சேர்மன் பதவிக்கு போட்டியிட்டால் அவர்கள் மண்டை உடைக்கப்படும் என மிரட்டியதாகவும் அதன் காரணமாகவே அனைவரும் தலைக்கவசம் அணிந்து பதவியேற்க வந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் உட்கட்சிப் பூசல் காரணமாகவே பேரூராட்சியில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. அக்கட்சியின் பேரூர் கழக செயலாளர் மற்றும் ஒன்றிய செயலாளர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவே மாவட்டம் முழுவதும் வெற்றிபெற்ற போதிலும் திசையன்விளை பேரூராட்சியில் திமுக வெற்றி பெற முடியவில்லை.
இந்த நிலையில் அதிமுக கவுன்சிலர்களை குதிரை பேரத்தில் ஈடுபடுத்தி பேரூராட்சியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனை தவிர்க்கும் விதமாக கவுன்சிலர்களும் அதிமுக அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன் கட்டுப்பாட்டில் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அங்கிருந்து வாகனம் மூலம் பேரூராட்சி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர்கள் பதவியேற்பு விழா முடிந்ததும் மீண்டும் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இன்னும் முப்பத்தி ஆறு மணி நேரம் சேர்மன் பதவி தேர்தலுக்காக உள்ள நிலையில், கடைசி கட்ட முயற்சியில் ஆளும் தரப்பினர் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. அவர்களை காப்பாற்றி திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த விஷயங்களை பேரூராட்சியை கைப்பற்றும் நோக்கில் அதிமுக செயல்பட்டு வருகிறது.