திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் தன்னிடம் தவறாக நடக்க முயன்றவரை கொலை செய்த பெண்ணை போலீசார் விடுதலை செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்ட எஸ்பி வருண்குமார் உத்தரவின் பெயரில் அந்த பெண்ணை விடுதலை செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியை சேர்ந்தவர் அமுதா. இவரும் இவரின் கணவர் பூங்காவனமும் மீஞ்சூர் அருகே வழுதிகை மேடு பகுதியில் மீன் பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வந்தனர்.
தினமும் வேலை முடித்துவிட்டு பண்ணைக்கு அருகிலேயே கணவனும், மனைவியும் தூங்குவது வழக்கம். ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதி என்பதால் இங்கு பெரிய அளவில் பாதுகாப்பு இல்லை.

பாதுகாப்பு
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அமுதா தூங்கிக்கொண்டு இருந்த போது அந்த வழியாக வந்த மர்ம நபர் அமுதாவிடம் தவறாக நடக்க முயன்று இருக்கிறார். அமுதாவின் கணவர் பூங்காவனத்தை தாக்கிவிட்டு, அமுதாவை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார். அமுதாவின் கணவரும் காயங்களோடு அந்த மர்ம நபரை தடுக்க முயன்று இருக்கிறார்.

தாக்குதல்
ஆனால் அமுதாவின் கணவர் பூங்காவனத்தை அந்த மர்ம நபர் அடித்து போட்டுவிட்டு, அமுதாவை அங்கிருந்து தூக்கி செல்ல முயன்றுள்ளார். இதையடுத்து அமுதா அங்கிருந்த கற்களை வைத்து மர்ம நபரை மோசமாக தாக்கி உள்ளார். தற்காப்பு நடவடிக்கையாக அந்த மர்ம நபரை அமுதா தாக்கி உள்ளார். இதில் அந்த மர்ம நபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மரணம்
இந்த நிலையில் பழங்குடி பெண்ணான அமுதா மீது அப்பகுதி காவல்துறையினரை வழக்கு பதிவு செய்து இருந்தனர். அந்த பெண் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் பிரிவு 100 ன் கீழ் அந்த பெண்ணை நேற்று விடுதலை செய்தார்.

தற்காப்பு
தற்காப்பு நடவடிக்கையாகவே அந்த பெண் நடந்து கொண்டார். அந்த பெண்ணுக்கு வேறு வழியில்லை. இதனால் அவர் செய்தது தவறு கிடையாது. சட்டப்பிரிவு 100 ன் கீழ் அவர் செய்தது குற்றம் கிடையாது. அதனால் அவரை விடுதலை செய்யலாம் என்று எஸ்பி வருண்குமார் உத்தரவிட்டு, நேற்று அந்த பெண்ணை வழக்கில் இருந்து விடுவித்துள்ளார்.