தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்த நாளில் இருந்து அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கும் மிக முக்கியமான ஒன்று 2021-22ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாட்டின் பட்ஜெட் தான்.ஏற்கனவே இந்த பட்ஜெட் அறிக்கையில் விவசாய துறைக்குத் தனி பட்ஜெட் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த பட்ஜெட் எப்படி இருக்கும் எனத் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெளிவான பதில் அளித்துள்ளார்.
கொரோனா 2வது அலை
இந்தியா முழுவதும் கொரோனா 2வது அலை தொற்றின் மூலம் வர்த்தகம், பொருளாதாரம் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், பட்ஜெட் அறிக்கை மீதான மக்கள் எதிர்பார்ப்புகள் அதிகரிக்கக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
திருத்தப்பட்ட பட்ஜெட் அறிக்கை
ஜூலை மாதம் கடைசி அல்லது ஆகஸ்ட் மாத துவக்கத்தில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் ஒரு திருத்தப்பட்ட பட்ஜெட் அறிக்கையாகவே இருக்கும். கொரோனா முதல் அலையை விடவும் 2வது அலையில் பொருளாதாரம் 5 அல்லது 6 மடங்கு அதிகமாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.
ஜூன் 30 தரவுகள்
ஏற்கனவே நடப்பு நிதியாண்டில் 4 முதல் 5 மாதங்கள் முழுமையாக முடிந்துள்ள நிலையில், ஜூன் 30 தரவுகளை வைத்து அடுத்த 6 மாத காலத்தில் சிறப்பான மாற்றங்களைக் கொண்டு வரத் திட்டமிட்டு உள்ளோம் எனக் கூறியுள்ளார்.
இடைக்கால பட்ஜெட் அறிக்கை
அதிரடி மாற்றங்கள், திட்டங்கள் உடன் உண்மையான பட்ஜெட் அறிக்கை பிப்ரவரி 2022ல் தாக்கல் செய்யப்படும், முந்தைய அரசு ஏற்கனவே தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் அறிக்கையை, தற்போதைய நிதிநிலையை வைத்து எந்த திட்டங்களை, எப்படிச் செயல்படுத்தப்படும் என்பதே இந்த பட்ஜெட்-ல் முக்கியமானதாக இருக்கும்.
டிஜிட்டல் பட்ஜெட் அறிக்கை
மேலும் இந்த பட்ஜெட் அறிக்கை, டிஜிட்டல் பட்ஜெட் அறிக்கையாக இருக்கும் எனவும் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் பட்ஜெட் குறித்து 2017 முதல் தான் கேட்டுக்கொண்டு வருவதாகவும், ஆட்சிக்கு வந்த உடனே முதல்வர் முக.ஸ்டாலின் உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
5 மாநில தேர்தல்
கொரோனா தொற்று காரணமாக நாட்டின் பொருளாதாரமும், மாநிலத்தின் பொருளாதாரமும் மிகவும் மேசமாக இருக்கும் நிலையில் தமிழ்நாடு உட்பட 5 மாநிலத்தில் தேர்தல் நடைபெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
சவாலான பட்ஜெட்
இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் மேசமாக இருக்கும் வேளையிலும், தமிழ்நாட்டின் நிதி நிலை வரலாறு காணாத சரிவை அடைந்திருக்கும் இந்த வேளையில் புதிதாக அமைந்துள்ள ஸ்டாலின் தலைமையிலான அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. இது மிகவும் சவாலான காலம் என்பது அனைவரும் அறிந்ததே.