சென்னை: தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும் சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி உட்பட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே பகல் நேரங்களில் வெயிலடித்தாலும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் மழை கொட்டி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கோலியானுர், விழுப்புரம் பகுதிகளில் தலா 8 சென்டிமீட்டர் மழையும், வளவனூரில் 6 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தேனி, கோவை, நீலகிரி, நாமக்கல், சேலம், வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் சேலம், நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஏனைய மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரைக்கும் நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழ்நாடு மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய லேசாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிக பட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். தென்மேற்கு வங்கக்கடல், தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடலுக்கு 5 நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.