சென்னை: தமிழகத்தில் ஒமிக்ரான் ஒமிக்ரான் தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் இன்று மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. புதிய அச்சுறுத்தலாக உருவாகியுள்ள ஒமிக்ரான் வகை கொரோனாவும் அதிகமாக பரவி வருகிறது. இதுவரை 121 பேருக்கு இந்த வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி பள்ளி வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. கொரோனா பரவலை தடுக்க 15 வயதுக்கு மேற்பட சிறாருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் விரைவில் பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்படவுள்ளதால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என அச்சம் எழுந்துள்ளது.
ஒமிக்ரான் பாதிப்பு தொடர்ந்து அதிவேமாக உயரும் நிலையில் ஒமிக்ரான் தடுப்பு பணிகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை செயலாளர் இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில், மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவதோடு, மாவட்ட எல்லைகளில் கண்காணிப்புகளை கடுமையாக்குவது, பரிசோதனைகளை அதிகரிப்பது, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துவது மற்றும் ஊரடங்கு தொடர்பாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.