சென்னை: தமிழகத்தில் கொரோனா தாக்கம், வடகிழக்கு பருவமழை, டெங்கு பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2 து அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. பின்னர் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.அந்த வகையில் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளில் நேரடி வகுப்புக்கள் தொடங்கப்பட்டுள்ளன. கோவில்கள் திறப்பு, தியேட்டர்களில் 100 % அனுமதி, சுற்றுலா தலங்கள் திறப்பு, உணவகங்கள் திறப்பு, பொது போக்குவரத்திற்கு அனுமதி என அனைத்து தளர்வுகளும் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தாக்கம், வடகிழக்கு பருவமழை, டெங்கு பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாடுகள் நவ.30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.வடகிழக்கு பருவமழை, மழை, வெள்ள காலங்களில் டெங்கு போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த, பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும்.பொது இடங்களில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முக கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.