சென்னை: தமிழகத்திற்கு ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு சரியான அளவில் தடுப்பூசிகள் கிடைக்க வேண்டும் என்றும் அவர் எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்த முதலில் பலரும் ஆர்வம் காட்டவில்லை. கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டிய நிலையில் பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஜூலை மாதத்திற்கான தொகுப்பில் 71 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், இதுவரையில் 20 லட்சத்துக்கும் குறைவான தடுப்பூசிகளே வந்துள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல ஊர்களில் தடுப்பூசி செலுத்துவதில் தடை ஏற்படுகிறது.
நாளொன்றுக்கு 2 லட்சம் தடுப்பூசி தேவைப்படுவதாக குறிப்பிட்டிருக்கும் சுகாதாரத்துறை, மத்திய அரசிடம் இருந்து குறைவான தடுப்பூசிகளே கிடைப்பதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்துக்கு சிறப்பு ஒதுக்கீடாக கூடுதலாக ஒரு கோடி தடுப்பூசி வழங்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழகத்திற்கு மிகக் குறைவாகவே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்வது மிகவும் கடினமாக உள்ளது.
தமிழகத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. தடுப்பூசி ஒதுக்கீட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரி செய்ய வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு சரியான அளவில் தடுப்பூசிகள் கிடைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்