கர்நாடக மாநிலம் சுலியா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஷர்வயா. கர்நாடகத்தில் பெண்கள் ஹிஜாப் அணிவது தொடர்பாக எழுந்த பிரச்னை காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதன்காரணமாக ஷர்வயா வீட்டில் இருந்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி அவரது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பல் துலக்குவதற்காக அவர் பிரஷ் எடுத்து பேஸ்டை அப்ளை செய்துள்ளார். பல் துலக்க ஆரம்பித்தது அது பேஸ்ட் இல்லை என்பதை உணர்ந்து அது என்ன க்ரீம் என பார்த்துள்ளார்.
அப்போது தான் தவறுதலாக டூத் பேஸ்ட்-க்கு பதிலாக எலி மருந்தை வைத்து பல் துலக்கியது தெரியவந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர் உடனடியாக வாயை சுத்தம் செய்துள்ளார். பேஸ்டை வைத்து பல் துலக்கிவிட்டு வீட்டினரிடம் சொன்னால் கேலி செய்வார்கள் என்ற எண்ணத்தில் எதுவும் சொல்லாமல் இருந்துள்ளார். அன்றைய தினம் அவரது உடல்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதன்காரணமாக எலி மருந்தில் பல் துலக்கியதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் தான் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி அவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து எலி மருந்தில் பல் துலக்கிய விஷயத்தை பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அவரை மங்களூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.