டெல்லி: டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் முக ஸ்டாலின் பேசும் வீடியோவை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக சீனியர் தலைவர்கள் பார்த்துக்கொண்டு இருந்த வீடியோவும் புகைப்படமும்தான் தற்போது தமிழ்நாடு அரசியலில் டாக் ஆப் தி டவுன் ஆகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று இருக்கிறார்கள்.
இதையடுத்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் இன்று காலை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் சேர்ந்து சில ஆலோசனைகளும் மேற்கொண்டனர்.

டெல்லி தமிழ்நாடு இல்லம்
இந்த சந்திப்பின்போது, முன்னாள் அமைச்சர் வேலுமணி, எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், அதிமுக டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோரும் பங்கேற்றனர். அவர்களும் தமிழ்நாடு இல்லத்தில், ஓபிஎஸ், மற்றும் எடப்பாடியுடன், தீவிரமாக ஆலோசனை நடத்திக் கொண்டு இருந்தனர்.

ஒரே நேரத்தில் பாஸ்
ஆனால் விஷயம் அது கிடையாது.. நாடாளுமன்ற வளாகத்துக்குள் செல்வதற்கு வாகனங்களுக்கு பாஸ் பெறப்பட வேண்டும். அதில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் இருவருக்கும் ஒரே நேரத்தில் பாஸ் வழங்கப்பட்டு இருந்தது. எனவே ஒரே நேரத்தில் அங்கிருந்து கிளம்ப வேண்டியதாக இருந்தது. இதுவும் விஷயமல்ல.

ஸ்டாலின் வீடியோ
அதிமுக தலைவர்கள் காத்திருந்த வரவேற்பு அறைக்குள் ஒரு பெரிய டிவி பொருத்தப்பட்டிருந்தது. அதுவும் விஷயம் அல்ல. அப்படியானால் என்னதான் விஷயம் என்று கேட்கிறீர்களா.. அந்த டிவியில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பேசிக்கொண்டு இருந்த வீடியோ ஒளிபரப்பாகிக் கொண்டிருந்ததுதான், விஷயமே.

புகைப்படங்கள்
இதுதான் இந்த வீடியோ எந்த ஒரு சேனலிலும் ஒளிபரப்பானது கிடையாது .நேரடியாக பென்டிரைவ் போன்ற உபகரணங்கள் மூலமாக வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது போல காட்சியளித்தது. புகைப்படம் மற்றும் வீடியோகிராபர்கள் அங்கு சென்ற நேரத்திலும், இந்த வீடியோ ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது இதையும் சேர்த்து பத்திரிகை நிருபர்கள் புகைப்படம் வீடியோ எடுத்தனர்.

அரசியலுக்கு புதுசு
அதிமுக தலைவர்கள் அமர்ந்திருந்த இடத்துக்குள் ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கும் வீடியோ எதற்காக ஓடிக்கொண்டிருந்தது என்பது பெரும் புரியாத புதிராக இருக்கிறது. மேலும் இது அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது . ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக இருந்த காலம் வரை அதாவது அவர் மரணமடையும் காலம் வரை, அதிமுக மற்றும் திமுக நிர்வாகிகள் எதிர்க்கட்சிகள் போல செயல்படாமல் எதிரிக்கட்சிகள் போலதான் செயல்பட்டனர். திமுகவினர் இல்லத் திருமணத்துக்கு அதிமுக கட்சிக்காரர் சென்றால் கட்சியிலிருந்து நீக்கப்படும் சூழ்நிலை நிலவியது. ஒருவேளை எதிர்க்கட்சியை சேர்ந்த தலைவரின் வீடியோவை இன்னொரு கட்சி தலைவர் பார்த்துக் கொண்டிருந்தால் அது புகைப்படங்களாக எடுக்க அனுமதிக்கப்பட்டது கிடையாது. ஆனால் இப்போது வெளிப்படைத் தன்மையோடு இந்த புகைப்படமோ வீடியோக் காட்சிகளை ஒளிபரப்பாகி உள்ளன. ஆனால், ஸ்டாலின் எதைப் பற்றி பேசிய வீடியோ.. அதை அதிமுக தலைவர்கள் ஏன் இப்படி உன்னிப்பாக பார்த்துக் கொண்டே இருந்தார்கள் என்பது மட்டும்தான் புரியாத புதிர்.