சென்னை: தமிழ்நாட்டில் திடீரென கொங்கு நாடு சர்ச்சையை பாஜகவினர் கிளப்பி இருக்கும் நிலையில் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் ஜெய் தமிழ்நாடு என்று பேசிய சம்பவம் வைரலாகி வருகிறது.தமிழ்நாட்டில் இருந்து கொங்கு மண்டலத்தை பிரித்து கொங்கு நாடு மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்று பாஜக நிர்வாகிகள் புதிய கோரிக்கையை முன்னெடுத்து வருகிறார்கள். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் கோவையில் தெற்கு தொகுதியில் பாஜக வெற்றிபெற்றது
பாஜகவின் வானதி சீனிவாசன் வெற்றிபெற்றார். கோவையில் அனைத்து இடங்களிலும் அதிமுக கூட்டணியே வென்றது. இந்த நிலையில் பாஜக தற்போது கொங்கு நாடு மாநில கோரிக்கையை வைக்க தொடங்கி உள்ளது.
யார்
பாஜகவின் கரு. நாகராஜன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் இந்த கோரிக்கையை முன்வைத்து பேச தொடங்கி உள்ளனர். தமிழ்நாடு மக்கள் இடையே இது பெரிய அளவில் எதிர்ப்பலைகளை சந்தித்துள்ளது. பாஜக – அதிமுக கூட்டணி வெல்லவில்லை என்றதும் தமிழ்நாட்டை தற்போது துண்டாட நினைக்கிறார்கள் என்று மக்கள் பலர் விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.
விமர்சனம்
தமிழ்நாட்டை யாராலும் பிரிக்க முடியாது, மக்கள் கவலைப்பட வேண்டாம் என்று திமுக எம்பி கனிமொழியும் நேற்று வாக்குறுதி கொடுத்து இருந்தார். இந்த நிலையில்தான், தமிழ்நாட்டில் திடீரென கொங்கு நாடு சர்ச்சையை பாஜகவினர் கிளப்பி இருக்கும் நிலையில் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் ஜெய் தமிழ்நாடு என்று பேசிய சம்பவம் வைரலாகி வருகிறது.
திருவள்ளூர்
திருவள்ளூர் அருகே தண்டலம் கிராமத்தில் அரசு மருத்துவமனை ஒன்றை திறந்து வைக்கும் விழாவில் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் கலந்து கொண்டு பேசினார். அதில், தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். கட்டுப்பாடுகளை பின்பற்றி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கொரோனா பரவலை தடுக்க அரசுக்கு உதவ வேண்டும் என்று கூறினார்.
தமிழ்
இதையடுத்து தமிழில் உரையை முடித்த ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், நன்றி வணக்கம்.. ஜெய் ஹிந்த்,.. ஜெய் தமிழ்நாடு என்று முழக்கமிட்டார். இதையடுத்து அங்கிருந்த மக்கள் பலரும் ஆரவாரமாக கைதட்டினார்கள். ஜெய் தமிழ்நாடு என்று ஆளுநர் கூறியது அங்கு மக்களிடையே வரவேற்பை பெற்றது. தமிழகம் என்று சொல்லாமல், முறையாக தமிழ்நாடு என்று ஆளுநர் சொன்னதும், கொங்குநாடு சர்ச்சைக்கு இடையில் அவர் இப்படி பேசியதும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.