
சென்னையில் கடந்த 2 நாட்களாக விடாமல் தொடர் மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகம் முழுவதும் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை கொறட்டூர், கொளத்தூர், பூம்புகார் நகர், GKM நகர், பெரவலூர், புளியந்தோப்பு ஆகிய பகுதிகளில் தொடர் மழையால் தேங்கிய மழைநீர் வடியாமல் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. இந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் 3 நாட்களாக முறையான உணவு மற்றும் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.

இதனிடையே, கொறட்டூரில் இன்று முதலமைச்சர் மு.கஸ்டாலின் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கினார். அப்போது, பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ‘எங்களுக்கு சாப்பாடு வேண்டாம்…ஆண்டுதோறும் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் தங்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்’ என ஸ்டாலினிடம் துணிச்சலுடன் முறையிட்டார்.
இதை பார்த்த திமுக நிர்வாகிகளில் சிலர் அந்த பெண்ணை ஏன் இங்கே வரவழைத்தீர்கள் என ஆவேசத்துடன் கேள்வி கேட்டுள்ளனர். இந்த செயல் பிடிக்காத பெண்கள் சிலர் ஸ்டாலினிடம் முறையிட்ட பெண்ணுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.மேலும், தங்களது பகுதியையும் நேரில் பார்வையிடுமாறு ஸ்டானிடம் கேட்ட பெண்ணிடம் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய அவர் இங்கு வந்துள்ளார் என ஏளனம் செய்து பொதுமக்களை கோபமடையச் செய்தது. முதலமைச்சர் ஸ்டாலினிடம் நேருக்கு நேர் முறையிட்ட பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.