சென்னை: சென்னை மாநகராட்சியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ட்ரோன்கள் மூலம் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒத்திகை இன்று(அக்.,16) ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் துவக்கமே, அமர் களமாக உள்ளது. இரண்டு தினங்களாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. தலைநகர் சென்னையில் இடைவிடாது மழை பெய்து வருகின்றது. நகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்காத வண்ணம் சென்னை மாநகராட்சி அதிகாரிகள், மண்டலம் வாரியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் படகுகள் செல்ல முடியாத சூழ்நிலையில் மழைநீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை ட்ரோன் மூலம் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒத்திகை இன்று(அக்.,16) ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.
இதனை அமைச்சர் கே.என்.நேரு ரிப்பன் கட்டட வளாகத்தில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, துணை மேயர் மகேஷ்குமார், ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) டாக்டர் வி. ஜெயசந்திர பானு ரெட்டி, துணை ஆணையாளர்கள் வி.சிவகிருஷ்ணமூர்த்தி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.