சென்னை: சென்னையில் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராணுவ வீரர் கொலையை கண்டித்து நேற்று மாலை பேரணியாக சென்று பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் ராணுவ வீரர் படுகொலையை கண்டித்து சென்னையில் அண்ணாசாலை மற்றும் சிவானந்தா சாலை சந்திப்பில் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை அருகே நேற்று மாலை பாஜ சார்பில் உண்ணாவிரத போராட்டம் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்திய பேரணி நடைபெற்றது.
போராட்டத்திற்கு பாஜ தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். இதில் முன்னாள் ராணுவத்தினர், துணை ராணுவ படையினர், அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரியில் பிரபு என்கிற ராணுவ வீரர் அண்மையில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பேரணியில் பங்கேற்ற 3,500 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.