சென்னை: செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்குவிட மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்திற்குட்பட்ட திருமணி கிராமத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான எச்எல்எல் தடுப்பூசி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.
தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி, ரேபிஸ் தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு உயிர்காக்கும் தடுப்பூசிகள் தயாரிக்கும் நிலையில் இங்கு உட்கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு தடுப்பூசிகள் உற்பத்தி செய்ய தயார் நிலையில் உள்ளது.
தடுப்பூசி தயாரிக்கும் ஆலை
இதற்கிடையே கொரோனா தொற்று உச்சத்தில் சென்றபோது கொரோனாவை ஒடுக்க தடுப்பூசிகள்தான் ஒரே பேராயுதம் என்பதால் உலக நாடுகள் போட்டி போட்டு கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்தன. இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் தடுபூசிகள் தட்டுப்பாடு ஏற்பட்டபோது ச்எல்எல் தடுப்பூசி தயாரிக்கும் தொழிற்சாலையில் தடுப்பூசிகள் தயாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின் கடிதம்
எச்.எல்.எல் நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முதலவர் மு.க.ஸ்டாலின் அந்த நிறுவனத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் இது தொடர்பாக பிரதமர் மோடி, மத்திய சுகாதரத்துறை அமைச்சர் அஆகியோருக்கு கடிதங்களை எழுதி உள்ளார். தடுப்பூசி தயாரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள எச்.எல்.எல் நிறுவனத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு விடவேண்டும் எனவும் தமிழக அரசு கோரிக்கை விடுத்து இருந்தது.
இதுவரை பதில் இல்லை
ஆனால் மத்திய அரசு இது தொடர்பாக இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. எச்.எல்.எல் நிறுவனத்தில் தடுப்பூசிகள் தயாரிப்பதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அதற்கான நிதியும் ஒதுக்காமல் கிடப்பில் போட்டுள்ளது.இதனால் தடுப்பூசி உற்பத்தி ஆலையை அரசுக்கு குத்தகைக்கு வழங்க வலியுறுத்தியும், கொரோனா தடுப்பூசி தயாரிக்க தமிழ்நாடு அரசுக்கு அனுமதி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரியும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
உத்தரவிட முடியாது
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி எம்.ஆர்.ஷா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கூறிய நீதிபதிகள் ‘ செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலையை தமிழ்நாடு அரசுக்கு குத்தகைக்குவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது. இந்த ஆலையை செயல்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கலாம்’ம் என்றனர். அதே வேளையில் மனுவை வாபஸ் பெறவும், திருத்தப்பட்ட கோரிக்கைகளுடன் மீண்டும் மனு தாக்கல் செய்யவும் நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.