Reporter : VIJAY,Chennai
சென்னை: சினிமா துறையில் வாய்ப்பு தேடும் பெண்களை குறிவைத்து பெண் குரலில் பேசி கவர்சியான புகைப்படங்களை அனுப்புமாறு பேசிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் கொளத்தூர் காவல் நிலையத்தால் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் , தனது 21 வயது பெண் மாடலிங் துறையில் பணியாற்றி வருவதாகவும், அவருக்கு சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி நபரொருவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் மனுவில் கூறியிருந்தார். இதனை அடுத்து கொளத்தூர் போலீசார் குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அந்த எண் தொடர்ந்து சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனை அடுத்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தொடர்ந்து அந்த செல்போன் எண்ணை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் பெரும்பாக்கம் பகுதியில் வைத்து அந்த எண்ணை பயன்படுத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில், பிடிபட்ட நபர் திருப்பூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பதும், இவர் பெரும்பாக்கம் பகுதியில் தனது நண்பர்களுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்ததும் தெரிய வந்தது. மேலும் இவர் மாடலிங் மற்றும் சினிமா துறையில் வாய்ப்பு தேடும் பெண்களை குறி வைத்து அவர்களிடம் முதலில் பெண் குரலில் பேசி வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி, அவர்களின் புகைப்படங்களை வாங்கிக் கொண்டு அதன் பிறகு மீண்டும் அவர்களை தொடர்பு கொண்டு கவர்ச்சியான புகைப்படங்களை அனுப்புமாறு கூறுவர் எதிர்முனையில் உள்ள நபர் பெண் என்பதால் மாடலிங் துறையில் உள்ள பெண்கள் கவர்ச்சியான படங்களை அவருக்கு அனுப்பி வைப்பார்கள். அதே போன்று தான் கொளத்தூரை சேர்ந்த இளம் பெண்ணும் தனது படங்களை அனுப்பி வைத்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ரஞ்சித் அதன் பிறகு தனது சுயரூபத்தை காண்பித்துள்ளார்.
அந்த பெண்ணுக்கு போன் செய்து அடிக்கடி ஹோட்டல் மற்றும் வெளியே செல்லலாம் என்று கூறியுள்ளார். இதனை கண்டுபிடித்த அந்த பெண் ரஞ்சித் ஒரு மோசடி நபர் என்பதை புரிந்து கொண்டு தொடர்ந்து அவரது போனை எடுக்காமல் இருந்துள்ளார். இது குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அவர்கள் கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த கொளத்தூர் போலீசார் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் ரஞ்சித்தை கைது செய்துள்ளனர். மேலும் இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் எந்த பெண்கள் தங்களது புகைப்படங்களை அதிகமாகக் பகீர்கிறார்களோ, அவர்களை குறிவைத்து ரஞ்சித் அவர்களிடம் பேசி ஏமாற்றி வந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மோசடி மன்னன் ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்த கொளத்தூர் போலீசார் அவரை நேற்று இரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர் பயன்படுத்திய செல்போனை ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.