சென்னை : இணையத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்று வரும் சார்பட்டா பரம்பரை படத்தில் பசுபதியின் மனைவியாக நடித்துள்ளவர் யார் என்ற விவரம் தற்போது கிடைத்துள்ளது.
இவர் இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தரின் மருமகள் என்ற தகவல் சினிமா வட்டாரத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவர் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தாலும் அவரின் கதாபாத்திரம் மனதில் நிற்கும்படி இருக்கும். காரணம் அந்த கேரக்டரை மிகவும் சிறப்பாகவும் இயல்பாகவும் வடித்திருப்பார் பா. ரஞ்சித்.
வித்தியாசமான கதை
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை கொடுக்கக்கூடியவர் பா ரஞ்சித். மெட்ராஸ் திரைப்படம் ஒரு சுவரை வைத்து நடக்கும் அரசியலை அப்பட்டமாக காட்டியது. சுவரை வைத்து இத்தனை அரசியலா என அனைவரையும் யோசிக்க வைத்தது. பா.ரஞ்சித்தின் ஆளுமையை புரிய வைக்கும் திரைப்படமாகவும் மெட்ராஸ் திரைப்படம் இருந்தது. மெட்ராஸ் படம் பா. ரஞ்சித்துக்கு மட்டுமல்லாமல் வட சென்னையின் புதிய வரிசை திரைப்படங்களுக்கும் அது அடையாளமாக மாறியது. தலித்தியம் பேசியதாக கூறப்பட்டாலும் கூட அதையும் தாண்டி பல முக்கிய அம்சங்களை இப்படம் தொட்டுச் சென்றது.
எதிர்மறையான விமர்சனங்கள்
மெட்ராஸ் படத்தின் மிகப் பெரிய வெற்றிக்குப் பிறகு அதிரடியான ஆட்டத்தை ஆரம்பித்தார் பா. ரஞ்சித். அந்த திரைப்படத்தை அடுத்து ரஜினியை வைத்து கபாலி மற்றும் காலா திரைப்படங்களை அடுத்தடுத்து இயக்கினார். இதிலும் புரட்சிகரமான பல கருத்துக்களை வைத்திருந்தார். அதை ரஜினியை வைத்தே பேச வைத்தார். இதனால் அவை பெருமளவில் ரீச் ஆகின. தலித்தியம் மிகப் பெரிய அந்தஸ்தை பா. ரஞ்சித் படங்கள் மூலம் அடைந்தது என்றால் அது மிகையில்லை. கபாலி நன்றாகப் போனாலும் கூட காலா வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பெறத் தவறியது.
அழகான கதை
இரு படங்களும் அவருக்கு வணிக ரீதியாக பெரிய அளவில் சப்போர்ட் செய்யவில்லை என்ற போதிலும் அவர் சொல்ல விரும்பிய கருத்துக்கள் மிகச் சரியாகவே சென்று சேர்ந்தன. இதனால்தான் ரஜினி என்ற இமயத்தை தனது கருவியாக அற்புதமாக பயன்படுத்தியிருந்தார் பா. ரஞ்சித். .அவர் தொட்டுச் சென்ற பல சமாச்சாரங்கள் பேசு பொருளாகின. இந்த நிலையில்தான். சர்பேட்டா பரம்பரை படத்தை இயக்கி மீண்டும் தனது திறமையை நிரூபித்து இருக்கிறார் பா.ரஞ்சித், 1970ம் ஆண்டுகால கட்டத்தில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளையும், கதாபாத்திரத்தின் தேர்வையும் மிகவும் அழகாக கையில் எடுத்து அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளார்.
கபிலாக ஆர்யா
சார்பட்டா பரம்பரை வெறும் ஒரு குத்துச் சண்டை குறித்த படம் மட்டும் கிடையாது. அரசியலையும், சமூக அவலங்களையும் இணைத்தே இந்த கதை பின்னித் தொடுக்கப்பட்டுள்ளது. ஆர்யா, துஷாரா, பசுபதி, ஜான் கோகேன், கலையரசன், சந்தோஷ் பிரதாப், சபீர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இதில் கபிலன் கதாபாத்திரத்தில் ஆர்யா அற்புதமாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்காக ஆர்யா கடுமையாக உழைத்து உடலை முறுக்கேற்றி உள்ளார். படத்தில் அவரின் உடல் அமைப்பை பார்க்கும் போதே பிரம்மிப்பு தோன்றுகிறது.
வில்லன்
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த வேம்புலி, டான்ஸிக் ரோஸ் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தாலும் பட்டையை கிளப்பி விட்டார். ஒரே படத்தில் அவரின் புகழ் உயர்ந்து விட்டது. ஜான்விஜய் படம் முழுக்க டாடி என்ற பெயருடன் அசால்ட் பண்ணி விட்டார். படம் முழுக்க ஒவ்வொரு கேரக்டரையும் அத்தனை பேரையும் பேச வைத்து அசத்தியுள்ளார் ரஞ்சித். கே.பாலச்சந்தர் படங்களில்தான் எந்த ஒரு கேரக்டரும் வீணடிக்கப்படாமல் படத்துக்கு உதவியாக இருக்கும். வெளியிலும் பேசப்படும். அந்த அளவுக்கு இப்போது பா. ரஞ்சித்தும் தனது படங்களை வலுவாக சித்தரித்து வருகிறார்.
ரங்கன் வாத்தியார்
குத்துச்சண்டை பயிற்சியாளராக வரும் பசுபதிக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சிறப்பான திரைப்படம் அமைந்துள்ளது. ரங்கன் வாத்தியார் கதாபாத்திரத்தில் பசுபதி நடித்து அமர்க்களப்படுத்தி இருப்பார். மேலும் பசுபதி திமுக காரராக வந்து அவ்வப்போது அரசியல் வசனங்களையும் பேசி இருப்பார். இப்படி ஒரு கேரக்டரை அதுவும் மிக மிக எதார்த்தமாக எந்த மிகையும் இல்லாமல் நடிப்பது பசுபதியால்தான் நிச்சயம் முடியும். அவரது நாடகத் திறமை இந்த பாத்திரத்துக்கு ரொம்பவே இயல்பாக உதவி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
கே பாலச்சந்தரின் மருமகள்
இப்படத்தில் பசுபதியின் மனைவியாக நடித்தவர் குறித்த விவரம் தற்போது தெரியவந்துள்ளது. இவர் இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தரின் மகனான கைலாசத்தின் மனைவி கீதா. கே பாலச்சந்தரின் மருமகள் ஆவார். மேலும் கீதா கைலாசம் ஒரு எழுத்தாளராவார். நிறையப் பேருக்கு இவர் குறித்துத் தெரியவில்லை. உண்மையில் மிகச் சிறந்த நடிகைதான் கீதா கைலாசம். ஆனால் பாலச்சந்தர் ஒருமுறை கூட இவரை நடிக்க கூப்பிடவில்லை. இதை கீதாவே ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார்.
அழகான காட்சி
இந்த திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே இவர் நடித்திருப்பார். ஆனால் வந்த காட்சிகளில் அத்தனை அழுத்தமாக தனது முத்திரையைக் குத்தி விட்டுப் போயிருப்பார். குறிப்பாக பசுபதி ஜெயிலிலிருந்து திரும்பி வந்து வீட்டில் சாப்பிட்டுக்கொண்டு இருப்பார். இந்த காட்சியில் பசுபதியின் அருகில் அமர்ந்து உணவு பரிமாறிக்கொண்டு, அவரின் கால்களை தடவி விடுவார். நீண்ட நாட்கள் கழித்து தனது கணவரை பார்க்கும் இவர் மனைவியின் ஏக்கத்தை அழகாக வெளிப்படுத்தி இருப்பார். அந்த முகத்தில் உணர்வுகளை அத்தனை அற்புதமாக கொண்டு வந்து குவித்திருப்பார். மிகையே இருக்காது.
பாராட்டிய சூர்யா
சார்பட்டா பரம்பரை திரைப்படம் இணையத்தில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை வெற்று வருகிறது. இப்படத்தை நடிகர் சூர்யா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெகுவாக பாராட்டி உள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், சார்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதையை கண்முன் நிறுத்துகிறது என பாராட்டி இருந்தார். இப்படத்தில் நடித்த ஒவ்வொரு கலைஞரும் பாராட்டு மழையில் குளித்துக் கொண்டுள்ளனர். அந்த வரிசையில் கீதாவின் நடிப்பும் பலரால் பாராட்டப்பட்டு சிலாகிக்கப்படுகிறது. நாமும் பாராட்டுவோம்.. தொடர்ந்து நல்ல படங்கள் பல அவர் பண்ணட்டும் என்றும் கோரிக்கை வைப்போம்.