தெலுங்கானா : செகந்திராபாத் பஸ் டிப்போவில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான மின்சார பேருந்து எரிந்து எலும்பு கூடானது.
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள கன்டோன்மென்ட் பஸ் டிப்போவில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான மின்சார பேருந்து ஒன்றின் பேட்டரியை சார்ஜ் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

இதற்காக பேருந்தின் பேட்டரி சார்ஜிங் பாய்ன்டுடன் இணைக்கப்பட்டிருந்தது. அதேபோன்று மற்றொரு பேருந்தும் அங்கு சார்ஜ் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது அவற்றில் ஒரு பேருந்து திடீரென்று தீப்பற்றி எரிந்து எலும்பு கூடானது.
இதனை கவனித்த போக்குவரத்து கழக ஊழியர்கள் அருகில் இருந்த பேருந்தை அங்கிருந்து அகற்றி ஓட்டி சென்றனர். இதனால் அந்த பேருந்து தீ விபத்தில் இருந்து தப்பியது. தீ விபத்து பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். தீ விபத்திற்கான காரணம் பற்றி போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
