சென்னை: தமிழ்நாட்டிலேயே 100% தடுப்பூசி என்ற இலக்கை அடைந்த முதல் கிரமமாகத் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த காட்டூர் உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மாதம் கொரோனா 2ஆம் அலை உச்சத்தில் இருந்ததது. இதனால் வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அதன் பின்னரே வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த மே மாதம் 36 ஆயிரமாக இருந்த வைரஸ் பாதிப்பு தற்போது 5 ஆயிரம் என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளது.
வேக்சின் பணிகள்
மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து 3ஆம் அலை ஏற்படாமல் இருக்கத் தடுப்பூசிகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதனால் வேக்சின் பணிகள் தமிழ்நாட்டில் வேகப்படுத்தப்பட்டுள்ளது. வேக்சின் தொடர்பாக மக்கள் மத்தியில் முதலில் இருந்த தயக்கமும்கூட குறைந்து வருகிறது.
முதல் கிராமம்
இந்நிலையில், தமிழ்நாட்டில் 100% வேக்சின் என்ற இலக்கை அடைந்த முதல் கிரமமாகத் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த காட்டூர் உருவெடுத்துள்ளது. இந்த கிரமத்தில் தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. தேசியளவில் ஏற்கனவே காஷ்மீரில் உள்ள வெயன் கிராமம் 100% வேக்சின் என்ற இலக்கை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
100% வேக்சின்
காட்டூர் கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 3,332 ஆகும். இதில் 18 வயதுக்குக் குறைவானவர், கர்ப்பிணிகள், மருத்துவ காரணங்களால் வேக்சின் போட்டுக் கொள்ள முடியாதவர்கள் போக மீதமிருப்பவர்கள் 2,334 பேர் ஆகும். அவர்கள் அனைவருக்கும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் கொரோனா வேக்சினாவது செலுத்தப்பட்டுள்ளது.
கருணாநிதி
இங்கு வேக்சின் பணிகளை திருவாரூர் திமுக எம்எல்ஏ பூண்டி கலைவாணன் முன்னெடுத்துள்ளார். இங்குள்ள மக்களுக்குத் தடுப்பூசியின் நன்மைகளை எடுத்துக் கூறி அவர்கள் வேக்சின் செலுத்துவதை உறுதி செய்கிறார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தாயாரின் சொந்த கிராமமான இங்கு தான் கருணாநிதிக்கு ஒரு நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.
முன்மாதிரி கிராமம்
கொரோனா வேக்சின்களுக்கு பல நன்மைகள் இருந்தாலும்கூட இன்னும் சிலர் வேக்சின் எடுத்துக் கொள்ளத் தயக்கம் காட்டி வருகின்றனர். அவர்களின் அச்சத்தைப் போக்கும் வகையிலும், தமிழ்நாட்டிலேயே முன் மாதிரியான கிராமமாகவும் இந்த காட்டூர் கிராமம் உருவெடுத்துள்ளது. இந்தக் கிராமத்தைத் தொடர்ந்து அருகில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர்களும் அதிகம் வேக்சின் போட ஆர்வாம் காட்டி வருகின்றனர்.
கொரோனா தடுப்பூசி
கொரோனா அலை அலையாக மக்களைத் தாக்கி வரும் நிலையில், வேக்சின் மட்டுமே ஒரே நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேக்சின்கள் மட்டுமே ஒரே வழி என்பதை ஆய்வாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அனைத்து உருமாறிய கொரோனா வகைகளால் ஏற்படும் உயிரிழப்புகளைக்கூட வேக்சின்கள் தடுக்கிறது. எனவே, தற்போது இருக்கும் சூழலில் கொரோனாவை வெல்ல வேக்சின்கள் மட்டுமே ஒரே ஆயுதம்..!