மும்பை: இந்திய கேப்டன் விராட் கோலி உடனான தனது நட்பு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன். கடந்த வாரம் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது நியூசிலாந்து.
பலமான அணி என்ற பெயருடனும், அபாயகரமான பவுலிங் யூனிட் என்ற பெயருடனும் களமிறங்கிய இந்திய அணி நியூஸிலாந்தின் பவுலிங் முன்பு சரண்டரானது.
பறிகொடுத்த இந்தியா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் எதிர்பார்த்த அளவுக்கு இந்திய அணி சிறப்பாக விளையாடவில்லை. ஓப்பனிங், மிடில் ஆர்டர், லோ ஆர்டர் என்று எந்த ஆர்டரும் ஒர்க் அவுட் ஆகவில்லை. பவுலிங்கில் ஷமி, அஷ்வின் மட்டும் ஆறுதல் அளித்தனர். ஆனால், வெற்றிக்கு அது மட்டும் போதுமா என்ன? கடைசியில் தோல்வியா மிஞ்சியது. போட்டி முடிந்த அன்று இரவு, நியூசிலாந்து அழைத்த பார்ட்டிக்கு கூட இந்திய வீரர்கள் செல்லவில்லை. அறையிலேயே இருந்தனர். குறிப்பாக, அன்று நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், இந்திய கேப்டன் கோலியை தனிப்பட்ட விதத்தில் அழைத்திருந்தார் என்று தகவல்கள் வெளியாகின.
நட்பின் அடையாளம்
பொதுவாகவே, கோலியும், வில்லியம்சனும் நெருங்கிய நண்பர்களாக வலம் வருகின்றனர். இருவரும் அண்டர்-19 அணிக்கு விளையாடிய போதிலிருந்தே பழக்கம். அதாவது, கடந்த 2008ம் ஆண்டு, கோலி தலைமையிலான இந்திய அண்டர்-19 அணி, உலகக் கோப்பையை வென்ற போது, அரையிறுதிப் போட்டியில் தோற்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் நம்ம வில்லியம்சன் தான். தோற்றாலும், கோலியுடன் அப்போதிலிருந்தே நட்பு பாராட்டினார்.
பட்டாசு கோலி
வில்லி “சைலன்ட்” பார்ட்டி. நம்மாளோ “ஆங்ரி” பேர்ட். ஆனாலும் இருவருக்குள்ளும் நட்பு க்ளிக் ஆகிவிட்டது. கடந்த 2020ம் ஆண்டு, நியூசிலாந்து சென்றிருந்த இந்திய அணி, டி20 போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்த போது, பவுண்டரி லைனில், பந்து பொறுக்கிப் போடும் பையன்களைப் போல, இருவரும் அருகருகில் அமர்ந்து போட்டியை பேசிக் கொண்டிருந்தது அன்றைய தினத்தின் வைரல் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்தளவுக்கு முஸ்தஃபா.. முஸ்தஃபா தோஸ்து இருவரும். இந்நிலையில், கோலியுடனான தனது நட்பு குறித்து வில்லியம்சன் மனம் திறந்திருக்கிறார்.
நட்போடு இருப்போம்
இதுகுறித்து அவர், “விராட் மற்றும் நான் ஒருவருக்கொருவர் நீண்ட காலமாக அறிந்திருக்கிறோம், நாங்கள் தோழர்கள். என் நெருங்கிய நண்பர். சக வீரர். விளையாட்டு ஒரு பகுதி என்றால், எங்கள் நட்பு ஒரு பகுதி. மேலும் பல ஆண்டுகளாக நீங்கள் உலகெங்கிலும் உள்ள மக்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பைப் பெறுகிறீர்கள், இந்த வெவ்வேறு அனுபவங்களின் மூலம் இந்த வெவ்வேறு நட்புகளை உருவாக்குங்கள், நீங்கள் ஒன்றாகவோ அல்லது ஒருவருக்கொருவர் எதிராகவோ இருந்திருக்கலாம். ஆனால், நட்போடு இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
உணர்ச்சி, உணர்வுகள்
மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை வென்ற பிறகு, நியூசிலாந்து வீரர்கள் கொண்டாடியது குறித்து பேசிய வில்லியம்சன், “நான் அமைதியாக இருக்கும்படி வீரர்களிடம் சொல்ல முயற்சித்தேன், ஆனால் அவர்கள் என் பேச்சை அதிகம் கேட்கவில்லை. நிறைய உற்சாகம் இருந்தது, உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளின் முழு கலவையாக அந்த கொண்டாட்டம் இருந்தது என நினைக்கிறேன்” என்று பேசியுள்ளார்.