சென்னை: ஆகஸ்ட், அதாவது இந்த மாதம், கொரோனா கேஸ்கள் அதிகரிக்கக்கூடும் என்றும், அக்டோபர் மாதம் அது மிக மோசமான நிலைமையை அடையும், அது மூன்றாவது அலையாக இருக்கக்கூடும் என்றும் ஆய்வுகள் கணித்துள்ளன.
அக்டோபர் மாதம், மறுபடியும் கொரோனா புதிய உயரத்தை தொடக்கூடும் என்றபோதிலும், கடந்த அலை அளவுக்கு மோசமாக இருக்காது என்றும் கணிப்புகள் வெளியாகிக் கொண்டுள்ளன.
ஐதராபாத் மற்றும் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) மாதுகுமல்லி வித்யாசாகர் மற்றும் மணீந்திர அகர்வால் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், குழு நடத்திய ஆய்வில், அக்டோபரில் நாளொன்றுக்கு 100000 அளவுக்கு நோய்த்தொற்றுகள் ஏற்படக் கூடும், மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டால், கிட்டத்தட்ட 150,000 நோய் தொற்று ஏற்படக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அலை
இந்த குழுதான் கடந்த அலை ஏற்படுவதற்கு முன்பும் சரியாக கணித்திருந்தது. எனவே இதன் ஆய்வு முடிவுகள் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றன. கேரளா மற்றும் மகாராஷ்டிரா போன்ற அதிக கொரோனா விகிதங்களைக் கொண்ட மாநிலங்கள் இதற்கு முக்கிய காரணமாக இருக்க கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

மோசமான நிலவரம்
மே 7 அன்று 400,000க்கும் அதிகமான தினசரி கேஸ்கள் இந்தியாவில் பதிவாகியிருந்தன. இதுவரை நாட்டின் மிக மோசமான அளவுக்கான உச்சத்தை அடைந்த தினம் அதுதான். ஆனால், இந்த அளவுக்கு 3வது அலை மோசமாக போகாது. அதேநேரம், நாட்டில் தடுப்பூசி அதிகப்படுத்தப்பட வேண்டும், கொரோனா ஹாட்ஸ்பாட்களை முதலிலேயே கண்டு பிடிக்க கண்காணிப்பு முறைகளைப் பயன்படுத்தவும் மற்றும் புதிய வேரியன்ட்கள் தோன்றுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்ட மரபணு வரிசைமுறை மூலம் விழிப்புடனும் இருக்க வேண்டும்.

இயற்கை நோய் எதிர்ப்பு சக்தி
2வது அலை நாட்டின் பல மக்களுக்கு இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்திவிட்டதாக கூறப்படுகிறது. எனவே 3வது அலை மிக பெரிய அளவுக்கு தாக்காது. கடந்த மாதம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய தேசிய ஆன்டிபாடி ஆய்வில், ஆறு வயதுக்கு மேற்பட்ட இந்தியர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏதாவது ஒரு வழியில் சந்தித்து விட்டனர்.

கேரளா நிலைமை மோசம்
கடைசி அலை தொடங்கிய ஐந்து மாதங்களுக்குப் பிறகு, இந்தியாவில் தினசரி நோய்த்தொற்றுகள் தற்போது சுமார் 40,000 என்ற அளவில் உள்ளன. கடந்த ஐந்து நாட்களாக, கேரளாவில்தான் சுமார் பாதி புதிய கேஸ்கள் பதிவாகியுள்ளன. இது அடுத்த ஹாட்ஸ்பாட் என்ற நிலையை ஏற்படுத்துமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

பெரிய மாநிலங்களில் அதிகரித்தால் ஆபத்து
கேரளாவிலும், சில சிறிய வடகிழக்கு மாநிலங்களிலும் தினசரி கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வணிகப் பள்ளியின் பேராசிரியர் பால் கட்டுமான் கூறியுள்ளார். இது இந்தியாவுக்கான கொரோனா டிராக்கரை உருவாக்கியுள்ள அமைப்பாகும். “ஒரு சில பெரிய மாநிலங்களில் தொற்று அதிகரிக்கத் தொடங்கினால், தற்போதைய சமநிலை குறையும், மேலும் நாடு முழுவதும் கேஸ்கள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கும்” என்று காட்டுமன் கூறினார்.

குறைவான தடுப்பூசிகள்
ப்ளூம்பெர்க்கின் தடுப்பூசி டிராக்கரின் படி, இந்தியா இதுவரை 470.3 மில்லியன் தடுப்பூசி மருந்துகளை மக்களுக்கு, அதாவது, மொத்த மக்கள் தொகையில் 7.6% மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கழிவு நீரை கண்காணிக்க வேண்டும்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தற்போது புதிய நோய் பரவல்களை எதிர்கொள்ள சிறப்பாக தயாராகி வருவதாகவும், எதிர்கால அலைகள் முன்பு இருந்ததைப் போல பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் கூறப்படுகிறது. இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் ஆலோசகர் ராம் விஸ்வகர்மா கூறுகையில், பொது சுகாதார அதிகாரிகள் நகர பகுதிகளில், வைரஸ் ஹாட்ஸ்பாட்களை கண்டறிய காற்று மற்றும் கழிவு நீர் கண்காணிப்பை நடத்த வேண்டும். கழிவு நீர் கண்காணிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து உங்களுக்கு கிடைக்கும் முதல் அறிகுறியாகும். இது மிக முக்கியமான காலமாகும், ஏனென்றால் அடுத்த அலை நெருங்கிவிட்டது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

டெல்டா வைரஸ்
டெல்டா வகை வைரஸ்கள் தற்போது அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் வேகமாக பரவி வருகின்றன. இது கடந்த இரண்டாவது அலையின்போது இந்தியாவில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய உருமாறிய வைரஸ் வகையாகும். டெல்டா வகை வைரஸ்கள் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து அடுத்த நபர்களுக்கு மிக அதிக வேகத்தில் பரவுகின்றன. அதிக நபர்களை பாதிக்கின்றன. எனவே தான் நமது நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. படுக்கை பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன.

சின்னம்மை போல பரவுகிறது
சின்னம்மை போல எளிதில் பரவுகிறதாம். தடுப்பூசி போடப்பட்ட மக்களிலும் பரவுகிறது. INSACOG அமைப்பின் தரவுகளின்படி, மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஒவ்வொரு 10 கேஸ்களிலும் கிட்டத்தட்ட 8 கொரோனா வைரஸ் நோயாளிகள் டெல்டா வைரஸ் காரணமாகத்தான் பாதிக்கப்பட்டிருந்தனர் எனவே இந்த வைரஸ் பாதிப்பு நமக்கு புதிது கிடையாது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

முன்னெச்சரிக்கை அவசியம்
அடுத்த அலை வரும்போது இந்தியா உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் காப்பாற்ற விரும்பினால் பொது சுகாதார முயற்சிகளை முடுக்கிவிட்டு கடந்த கால தவறுகளைத் தவிர்ப்பது முக்கியமாகும். முன்கூட்டியே ஹாட்ஸ்பாட்களை தனிமைப்படுத்துவது ரொம்ப ரொம்ப முக்கியம். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அரசுக்கு மிகுந்த முக்கியம் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய அம்சம்.