சென்னை: கொரோனா 3ம் அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுவதால் குழந்தைகளை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை வழங்க 13 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 13 பேர் கொண்ட குழுவினை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது,
கொரோனா வைரஸ் தொற்று பரவல் தமிழகத்தில் வெகுவாக குறைந்துவிட்டது. ஆனாலும் அண்டை மாநிலங்களில் பாதிப்பு உயர்ந்து வருவதால் தமிழகத்திலும் தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது,
சுற்றுலா தளங்கள்
இதனால் தமிழக அரசு, சென்னை, கோவை, திருப்பூர் உள்பட பல்வேறு நகரங்களில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மக்கள் அதிகம் கூடும் சுற்றுலா தளங்களையும் மூடியுள்ளது. மேலும் கேரளாவில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகள்
இந்நிலையில் கொரோனா 3வது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.முன்னெச்சரிக்கையாக குழந்தைகளுக்கு தேவையான சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைளை தீவிரப்படுத்து வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.
தமிழக அரசு குழு
தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது: “மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மற்றும் பணி இயக்குனர், கோவிட் வழக்குகளின் குழந்தை பராமரிப்பு குறித்த மாநில அளவிலான பணிக்குழுவை அமைக்குமாறு கோரியுயுள்ளார் . இதன்படியே 13 பேர் கொண்ட குழு அமைக்ககப்படுகிறது. இந்த பணிக்குழு முன்பு அமைக்கப்பட்ட ஒட்டுமொத்த மாநில COVID-19 பணிக்குழுவின் கீழ் ஒரு துணை பணிக்குழுவாக செயல்படும்.
குழந்தைகள் சிகிச்சை
கொரோனா பாதித்த குழந்தை பராமரிப்பது, குழந்தைகளுக்கு கொரோனா வராமல் தடுப்பது, குழந்தைகளுக்கு கொரோனா தொற்றுக்கான சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க 13 பேரை உறுப்பினர்களாக் கொண்ட மாநில அளவிலான பணிக்குழு குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா ஆராய்ச்சிகளின் முடிவுகள் தொடர்பான சமீபத்திய தகவல்களை அரசுக்கு வழங்கவும் மற்றும் வேறு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் அரசுக்கு தெரியப்படுத்தும் பணிகளையும் இந்த குழு மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.
அரசு உத்தரவு
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தலையில் இந்த 13 உறுப்பினர்கள் குழுவினை அரசு அமைத்துள்ளது. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவனை இயக்குனர், தேசிய சுகாதார பணி மிஷன் இயக்குனர், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குனர், தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் நிர்வாக இயக்குனர், மருத்துவ கல்வி இயக்குனர், மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள்இயக்குனர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.