சென்னை: ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான வரி தொடர்பான வழக்கில் அபராதம் கட்ட தயாராக இல்லை என விஜய் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
ரீல் ஹீரோக்களாக
நடிகர்கள் நிஜத்திலும் ஹீரோவாக நடந்து கொள்ள வேண்டும், வரி செலுத்துவது ஒவ்வொருவரின் கடமை என்றும் வாழ்க்கையில் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டும் என்றும் ரீல் ஹீரோக்களாக இருக்கக்கூடாது என்றும் அட்வைஸ் கூறினார்.
உத்தரவை எதிர்க்கவில்லை
இதனைதொடர்ந்து அபராதத்தை ரத்து செய்யக்கோரியும் தன் மீதான விமர்சனங்களை நீக்கக் கோரியும் நடிகர் விஜய் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் தரப்பு முன்வைத்த வாதத்தில், “நுழைவு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்க்கவில்லை.
விமர்சனத்தை ஏற்க முடியாது
நீதிமன்றத்தை நாடியதற்காக அபராதத்தை ரத்து செய்ய வேண்டும். மற்றவர்களை போல நடிகர்களுக்கும் நீதிமன்றத்தை நாட முழு உரிமை உள்ளது. மற்றவர்கள் தாக்கல் செய்த வழக்குகளில் இது போன்ற உத்தவுகளை பிறப்பிக்காத நிலையில் தன்னை மட்டும் கடுமையாக விமர்சித்தது ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டது.
அரசுக்கு உத்தரவு
இதையடுத்து, நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அபராதம் கட்ட விருப்பமில்லை
இந்நிலையில் அபாராதத்தை செலுத்திவிட்டு அறிக்கை தாக்கல் செய்யக் கோரி நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான வரி தொடர்பான வழக்கில் அபராதம் கட்ட விருப்பமில்லை என விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது
ரூ.25 லட்சம் கொடுத்தாச்சு
மேலும் ஏற்கனவே கடந்த ஆண்டு கொரோனா நிவாரண தொகையாக அரசுக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆகையால் ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை நிவாரணமாக வழங்க விருப்பம் இல்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.