மதுரா : உத்தர பிரதேச மாநிலத்தில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருவது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆட்டம் போட்டு வரும் கொரோனாவை இன்னும் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. பல மாநிலங்களில் கொரோனா குறைந்து விட்டாலும் கேரளா, மகாராஷ்டிராவில் தொற்று குறையவில்லை. கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் முந்தைய அலையை விட அதிகமாக இருக்கும் குறிப்பாக குழந்தைகளை அதிகமாக தாக்கும் என்றும் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மர்ம காய்ச்சல்
கொரோனாவே முழுமையாக அழியாத நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் மர்ம காய்ச்சல் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தர பிரதேச மாநிலம் மதுராவின் கோன் கிராமத்தில் கடந்த வாரம் முதல் பரவிய மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். மதுரா, ஆக்ரா மற்றும் ராஜஸ்தானின் பரத்பூரில் கூட மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.
மாதிரிகள் சேகரிப்பு
இந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட மொத்தம் 80 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மருத்துவக் குழுவினர் மதுராவின் கோன் கிராமத்திற்குச் சென்று மலேரியா, டெங்கு மற்றும் கொரோனா தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்தும் அவர்களது உறவினர்களிடமிருந்தும் மாதிரிகள் எடுத்தனர்.
டெங்கு காய்ச்சலா?
இந்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. குழந்தைகளின் இறப்புக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, டெங்கு காய்ச்சலுக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக மருத்துவ துறை அதிகாரிகள் கூறினர். ஆனாலும் அது உறுதியாக தெரியவில்லை.
மக்களுக்கு அறிவுறுத்தல்
இது தொடர்பாக மதுரா தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ரச்சனா குப்தா கூறுகையில், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மாதிரிகள் எடுத்து சோதனை செய்து வருகிறோம். கிராமத்தில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்துள்ளோம். சுற்றுப்புற பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க மக்களை அறிவுறுத்தி இருக்கிறோம். காய்ச்சல் அல்லது அது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளோம் என்று கூறினார்.