சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படுமா என்பது பற்றி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் தெரிவித்துள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட முக்கியமான அறிவிப்புகளில் ஒன்று பெண்களுக்கு டவுன் பஸ்களில் இலவசமாக பயணம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்பது.
முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றதும், இந்த உத்தரவை நடைமுறைப் படுத்தியுள்ளார். இதேபோல ஆவின் பால் விலையை குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் திட்டம்
ஆனால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற திமுக தேர்தல் அறிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்தக் கோரிக்கை எப்போது நிறைவேற்றப்படும் என்பது பற்றி பெண்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ரேஷன் அட்டைகளில் குடும்பத் தலைவி என்ற பெயர் மேலே இடம்பெற்றிருக்க வேண்டும்.. குடும்பத்தலைவர் பெயர் கீழே இடம்பெற்றிருக்க வேண்டும்.. அது போல உள்ள ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு மட்டும்தான் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றெல்லாம் வதந்திகள் பரவிய நிலையில் இதை தமிழக அரசு சமீபத்தில் மறுத்தது. சாதாரண ரேஷன் கார்டாக இருந்தாலும் போதும் என்பது அரசு வட்டார விளக்கம். இருந்த போதிலும் கூட, பணம் வழங்கும் திட்டம் எப்போது தொடங்கப்படும் என்பது இன்னமும் தெரியவில்லை. அவ்வப்போது அமைச்சர்கள் இந்த திட்டம் கண்டிப்பாக செயல்பாட்டுக்கு வரும் என்ற உறுதிப்பாட்டை வழங்கி வருகிறார்கள்.

எ.வ.வேலு ஆய்வு
இதில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் சீனியர் திமுக தலைவர் மற்றும் பொதுப்பணித் துறையின் அமைச்சரான எ.வ.வேலு. மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நெடுஞ்சாலைத்துறையில் சார்பில் நேற்று நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் வேலு பங்கேற்றார். இதில், மதுரை, தேனி, திண்டுக்கல் , சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அமைச்சர் வேலு பேட்டி
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த வேலு, ஊராட்சி ஒன்றிய சாலை தரம் உயர்த்த வேண்டும் என்று எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.. அதை ஏற்று நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் நாட்டில் ஆண்டுக்கு 2,000 கிலோ மீட்டர் அளவுக்கு சாலைகள் ஆண்டுதோறும் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. நெடுஞ் சாலை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளில் சுணக்கம் இருப்பதால் சில பகுதிகளில் பணிகள் தாமதமாகின்றன. அதை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பழனி-கொடைக்கானல் சாலை
பழனி மற்றும் கொடைக்கானல் சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கொடைக்கானல் மற்றும் மூணாறு இடையே சாலை அமைக்க கேரள மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளாக திருநெல்வேலி, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் புதிதாக பாலங்கள் கட்டப்படவில்லை எனவே போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மதுரையில் 3 புதிய பாலங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

பணம் வழங்குவோம்
தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை மட்டும் செய்யவில்லை, சொல்லாததையும் நிறைவேற்றி வருகிறோம். நாங்கள் சொன்னபடியே கட்டாயம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்திய தீருவோம். இவ்வாறு அமைச்சர் வேலு தெரிவித்தார்.