ChennaiDecember 28, 2022
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. இதனை ஜன.2ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.
ரூ.1000 பொங்கல் பரிசு ரொக்கத்தை அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே பெற முடியும். சர்க்கரை அட்டை வைத்து இருப்பவர்களுக்கு இந்தப் பணம் கிடைக்காது எனக் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, பிஹெச்ஹெச் கார்டுதாரர்களுக்கு அரிசி உள்பட அனைத்து பொருள்களும் வழங்கப்படும். பிஹெச்ஹெச்- ஏஏஒய் எனக் குறிப்பிட்டிருந்தால் 35 கிலோ அரிசி மற்றும் இதரப் பொருள்கள் பெற்றுக் கொள்ளலாம்.
என்பிஹெச்ஹெச்-எஸ் அட்டைத்தாரர்களுக்கு எந்தப் பொருளும் வழங்கப்படாது. இதனால் தமிழ்நாடு அரசு வழங்கவுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு பணம் ரூ.1000, பிஹெச்ஹெச் மற்றும் பிஹெச்ஹெச்-ஏஏஒய் உள்ளிட்ட கார்டுகளுக்கு மட்டும் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜன.2ஆம் தேதி திங்கள்கிழமை தொடங்கிவைக்கிறார். அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் தொடங்கிவைக்கின்றனர்.
முன்னதாக, 2023 தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் ரூ.1000, ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.