பேராசிரியர் உள்பட 4 பேர் பாலியல் தொல்லை அளிப்பதாக கூறி கலாஷேத்ரா கல்லூரி மாணவ – மாணவிகள் நேற்று போராட்டம் நடத்தினார்கள்.
சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் செயல்படும், ருக்மிணி தேவி நுண்கலைக் கல்லூரியில் நடனம் உள்ளிட்ட கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இங்கு, மாணவியருக்கு பேராசிரியர் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
புகாரின் அடிப்படையில், விசாரணை குறித்து தமிழக டிஜிபிக்கு அனுப்பி நோட்டீஸை தேசிய மகளிர் ஆணையம் திரும்பப் பெற்றது. அதன் பின்னர், கல்லூரியில் திடீர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, பாலியல் துன்புறுத்தல் ஏதும் நடைபெறவில்லை என தேசிய மகளிர் ஆணைய குழு அறிக்கை அளித்தது.
இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டப்படுவதாகக் கூறி, கல்லூரி வளாகத்தில் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே ருக்மணி தேவி நுண்கலைக் கல்லூரிக்கு ஏப்ரல் 6-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கலாக்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரி மாணவர்கள் அமைப்பு சார்பில் மத்திய கலாச்சார அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி உள்ளனர்.
இந்த புகார் கடிதத்தில் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு பேராசிரியர் உள்ளிட்ட நான்கு பேர் பாலியில் துன்புறுத்தல் அளித்து வருவதாகவும் அவர்களை கல்லூரி இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் மற்றும் நடன துறையின் தலைவர் Jyolsna Menon ஆகியோர் காப்பாற்றி வருவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடிதத்தில் எழுதி உள்ளனர்.