சென்னை: கர்நாடக மாநிலத்தில் நுழையும் தமிழக பேருந்து பயணிகள் ஆர்டிபிசிஆர் நெகடிவ் சான்றிதழ் அல்லது இரு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் காண்பிக்க வேண்டும் என மைசூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் தமிழக பயணிகள் கர்நாடகா செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக வீசியபோது மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்டது தமிழகமும் கர்நாடகாவும்தான். கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே கர்நாடகாவில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. தளர்வுகள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டாலும் வார விடுமுறை நாட்களில் முழு லாக்டவுன் அமலில் உள்ளது.
கேரளா, ஆந்திரா, தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்குள் வருபவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. மாநிலங்களுக்கு இடையேயான பொது பேருந்து போக்குவரத்து கடந்த 3 மாத காலமாக நிறுத்தப்பட்டிருந்து. தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் கர்நாடகம் ஆந்திரா மாநிலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளுக்கு அனுமதியளித்ததையடுத்து நேற்றுமுதல் தமிழகம் கர்நாடக இடையே தனியார், அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. சத்தியமங்கலத்தில் இருந்து மைசூரு, கொள்ளேகால் மற்றும் சாம்ராஜ்நகர் சென்ற தமிழக அரசு பேருந்துகளை மைசூரு மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் அரசு பேருந்துகள் சில மணி நேரம் காத்திருத்து பயணிகளை இறக்கி விட்டதாக கூறப்படுகிறது. கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கடந்த வாரம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கேரளா, மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால் அந்த மாநில எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இரு மாநிலங்களை ஒட்டியுள்ள 8 மாவட்டங்களில் இரவு நேர மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழை கொண்டு வர வேண்டும். அந்த சான்றிதழ் 72 மணி நேரத்துக்கு முன்பாக சோதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இந்த நிபந்தனை கார், பேருந்து, ரயில், விமானம் மூலம் வரும் அனைவருக்கும் பொருந்தும். கொரோனா அறிகுறியுடன் கர்நாடகாவுக்கு வருபவர்கள் 7 முதல் 15 நாட்கள் கட்டாயம் அரசு விடுதிகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளார். இதனிடையே கொரோனா நெறிமுறைகளை கடைபிடிக்காத தமிழக பேருந்துகள் கர்நாடகத்துக்குள் அனுமதிக்க இயலாது என மைசூரு மாவட்ட ஆட்சியர் ரவி உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு நெறிமுறை விதிகளின்படி கர்நாடகா மாநிலத்திற்குள் நுழையும் தமிழக பேருந்து பயணிகள் ஆர்டிபிசிஆர் நெகடிவ் சான்றிதழ் அல்லது இரு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் காண்பிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் இன்று சத்தியமங்கலத்தில் இருந்து மைசூருக்கு புறப்பட்ட தமிழக அரசு பேருந்துகளில் பயணிகளிடம் நடத்துனர் மற்றும் செக்கிங் இன்ஸ்பெக்டர் ஆகியோர் தடுப்பூசி சான்றிதழ் மற்றும் கொரானா நெகடிவ் சான்றிதழ் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினர். கர்நாடக அரசின் புதிய உத்தரவால் தமிழக பேருந்துகள் கர்நாடகா மாநில நகரங்களுக்கு இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கர்நாடக அரசின் கெடுபடியால் சத்தியமங்கலத்தில் இருந்து கொள்ளேகாலுக்கு இயக்கப்பட்ட 2 அரசு பேருந்துகள் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தனியார் பேருந்துகள் கொள்ளேகால் அருகே உடையார்பாளையம் செக்போஸ்ட் இரு மாநில எல்லை வரை சென்று திரும்பியது. கர்நாடக அரசு பேருந்துகள் தமிழகம் வருவதில் எந்த சிக்கலும் இல்லாதபோது தமிழக அரசு பேருந்துகள் கர்நாடகா மாநிலத்திற்கு பயணிப்பதில் கட்டுப்பாடு விதித்திருப்பது பயணிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல ஊட்டி கூடலூர் வழியாக கேரளா கர்நாடகா மாநிலங்களுக்கு சரக்கு லாரிகளை இயக்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு லாரிகளை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கூடலூர் வழியாக கர்நாடகாவிற்கு சரக்கு வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளதால் அத்தியாவசிய உணவுப்பொருட்களை ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.