Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தர மறுத்த எடப்பாடி.. நினைவிடத்தை உருகி வரவேற்கும் ஓபிஎஸ்! என்னாச்சு?

ops-eps3-1629729621-1

சென்னை: மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைப்பதற்கு அதிமுக முழுமனதாக வரவேற்பு தெரிவிப்பதாக அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் இன்று தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு நடைபெற்று வந்த போதுதான் கருணாநிதி மறைந்தார். அவரது உடலை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்வதற்கு தமிழக அரசு அப்போது அனுமதி வழங்கவில்லை. திமுக சார்பில் நள்ளிரவில் நீதிபதி வீட்டுக்கே சென்று அவசர வழக்காக இதை விசாரிக்க கோரப்பட்டது. நள்ளிரவு வரை நடைபெற்ற வாத விவாதங்களுக்கு பிறகு கருணாநிதி உடலை மெரினா கடற்கரையில், அறிஞர் அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்வதற்கு நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் இப்போது கருணாநிதிக்கு அங்கே நினைவிடம் அமைப்பதற்கு, அதிமுக தரப்பில் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

கருணாநிதி நினைவிடம்

சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் விதி எண் 110ன் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் 2.21 ஏக்கர் நிலப்பரப்பில், சுமார் 39 கோடி ரூபாய் செலவில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று அவர் அறிவித்தார். விதி எண் 110-ன் கீழ் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவார். ஆனால் அதில் கணிசமானவை நிறைவேற்றப்படாமல் போனதால் இந்த விதியின் கீழ் அறிவிப்பு வெளியிடுவதை, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி கடுமையாக விமர்சித்திருந்தார். ஏனெனில் இந்த விதியின்கீழ் அறிவிப்பு வெளியிட்டால் அதன் மீது விவாதங்கள் நடத்த முடியாது. அதனால்தானோ என்னவோ தெரியாது, ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு 110 விதியின் கீழ் எந்த உத்தரவையும் இதுவரை பிறப்பித்தது கிடையாது. முதல் முறையாக விதி எண் 110ன் கீழ் இன்று கருணாநிதி நினைவிடம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஸ்டாலின்.

ஸ்டாலின் அறிவிப்பு

இந்த நினைவிடத்தில் கருணாநிதியின் வாழ்க்கை சிந்தனை குறித்து ஒளிப்படங்களுடன் நினைவிடம் அமைக்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்தார். அண்ணா நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கருணாநிதிக்கு இந்த நினைவிடம் அமையப் பெறுகிறது. இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலினின் இந்த உத்தரவுக்கு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் வரவேற்று பேச்சு

இதுபற்றி ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்படுவதை முழுமனதுடன் அதிமுக வரவேற்கிறது. 50 ஆண்டு எம்எல்ஏவாக இருந்த கருணாநிதி தமிழகத்திற்காக பல சிறப்பு சட்டங்களை கொண்டுவந்தவர். சினிமாவில் கலைஞரின் வசனங்கள் அனல் பறக்கும். அது நமது சமூகத்தை முன்னேற்ற துணை நின்றுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளார் முதல்வர். கலைஞரின் பெயர் வரலாற்றில் நிலைத்திருக்கும். எனது தந்தை கலைஞரின் தீவிர பக்தர். தந்தையின் பெட்டிகளில் மனோகரா, பராசக்தி கதைகள் இருக்கும். அவற்றை மனப்பாடமாக ஒப்பிப்பார். தந்தை வெளியே சென்றிருக்கும் நேரத்தில் நாங்கள் அந்த கதைகளை எடுத்து படித்து பார்த்து இருக்கிறோம். இவ்வாறு புகழாரம் சூட்டியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

எடப்பாடியிடம் நேரில் கேட்ட ஸ்டாலின்

2018ம் ஆண்டு ஆகஸ்டு 7ம் தேதி தனது 94வது வயதில் கருணாநிதி உடல்நலக்குறைவால் மறைந்தார். அவர் விருப்பப்படி அறிஞர் அண்ணா சமாதி அமைந்துள்ள பகுதியில் அவருக்கு அடுத்தாற்போல கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்று ஸ்டாலின் உட்பட அவரது குடும்பத்தினர் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கை விடுத்தனர். எடப்பாடி பழனிசாமியை நேரில் சென்று சந்தித்து கருணாநிதிக்கு உடல் அடக்கம் செய்ய இடம் தரும்படி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். எடப்பாடி பழனிசாமியின் கைகளைப் பிடித்துக்கொண்டு வேண்டுகோள் விடுத்ததாக ஸ்டாலின் பின்னர் ஒருமுறை அந்த சம்பவங்களை விவரிப்பு செய்துள்ளார்.

நள்ளிரவில் நடந்த வழக்கு

இத்தனைக்குப் பிறகும்கூட கருணாநிதியை நல்லடக்கம் செய்ய மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி அரசு அறிவித்து விட்டது. இதையடுத்து அன்று ஆர்எஸ் பாரதி தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அப்போது பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த ஹுலுவாடி ரமேஷ் வீட்டில் இரவு 10.30 மணிக்கு விசாரணை தொடங்கியது. நள்ளிரவு வரை நடைபெற்ற வாத விவாதங்களுக்கு பிறகு, கருணாநிதி மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்க நீதிபதி ஹுலுவாடி ரமேஷ், உத்தரவிட்டார். இந்த உத்தரவை அறிந்ததும் கருணாநிதி உடல் வைக்கப்பட்டு இருந்த இடத்தில் நின்று கொண்டு இருந்த ஸ்டாலின் குலுங்கி குலுங்கி அழுதார். இதை பார்த்த மற்ற தொண்டர்களும் அழுதனர். கடுமையான நெகிழ்ச்சி சூழ்நிலைக்கு நடுவேதான் கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

திடீர் மாற்றம்

இந்த நிலையில்தான், இப்போது கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் கட்டுவதற்கு முதல்வராக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அதை அதிமுக வரவேற்றுள்ளது. எடப்பாடி பழனிசாமி இவ்வாறு கருணாநிதி விஷயத்தில் கடுமை காட்டியது அதிமுக தொண்டர்கள் ஒரு சிலர் மத்தியில் வரவேற்பு பெற்றதாக கூறப்பட்டது. ஏனென்றால் ஜெயலலிதா உயிரோடு இருந்த காலம் வரை கருணாநிதியை அரசியல் எதிரியாக கடுமையாக விமர்சனம் செய்து வந்துள்ளார். இருவரது ஆட்சியிலும், ஒருவருக்கொருவர் மாறிமாறி சில வழக்குகளில் கைது செய்யப்பட்டிருந்தனர். அந்த அளவுக்கு மோதல் நிலை இருந்தது. ஜெயலலிதா நினைவிடத்தை மெரினாவில் அமைத்தது விதிகளுக்குப் புறம்பானது என்று திமுக கூறிவந்தது. இதற்கு பதிலடியாக கருணாநிதி உடலை அடக்கம் செய்வதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறஇய அதிமுகவில் ஒரு பிரிவினர்.. ஜெயலலிதாவின் வாரிசு எடப்பாடிபழனிசாமி என்று கூறியதாக அதிமுக தரப்பு ஊடகங்களில் அப்போது செய்தி வெளியானதை கூட பார்க்க முடிந்தது. ஆனால் இப்போது நேர் எதிராக.. கருணாநிதி நினைவிடம் அமைப்பதற்கு ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார். அரசியல் நாகரீகம் என்ற அடிப்படையில் இது வரவேற்கத்தக்கது என்ற போதிலும், கருணாநிதி உடலை நல்லடக்கம் செய்தபோது அதை ஏன் அப்போதைய அதிமுக அரசு ஏற்கவில்லை, இப்போது வரவேற்பது ஏன் என்பதுதான் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வியாகும்.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp