ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நடுரோட்டில் பற்றி எரிந்து கொண்டு இருந்த கார் திடீரென தறிகெட்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எரியும் காரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள், அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடினர். இந்தச் சம்பவம் குறித்த வீடியோ இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இப்போதெல்லாம் சாலையில் சென்று கொண்டு இருக்கும் கார் திடீரென தீப்பற்றி எரியும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. அப்படியொரு ஆபத்தான விபத்து தான் இப்போது ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்துள்ளது.
பற்றி எரிந்த கார்: ஜெய்ப்பூரில் இன்று ஒருவர் வழக்கம் போலக் காரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது மேம்பாலத்தில் சென்று கொண்டு இருக்கும் போது காரில் திடீரென தீப்பற்றி இருக்கிறது. இதனால் பதறிய அந்த நபர் காரை விட்டு இறங்கிவிட்டார். சிறிதாகத் தொடங்கிய அந்த தீ கார் முழுக்க பரவிவிட்டது. மேம்பாலத்தில் அந்த கார் எரிந்த நிலையில், அதைச் சுற்றி நின்று பலரும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர். சிலர் அதை வீடியோவாகவும் எடுத்தனர். அப்போது தான் அந்தச் சம்பவம் நடந்துள்ளது. அதாவது எரிந்து கொண்டிருந்த அந்த கார் திடீரென சாலையில் ஓட தொடங்கிவிட்டது. மேம்பாலத்தின் சாய்வு தளத்தில் இருந்ததால் கார் திடீரென ஓட தொடங்கிவிட்டது. அலறிய மக்கள்: மொத்தமாகப் பற்றி எரிந்து கொண்டு இருந்த அந்த கார் திடீரென தங்களை நோக்கி வந்ததால் அங்கிருந்தவர்கள் பதறிப் போய்விட்டார்கள். நேற்று சனிக்கிழமை பிற்பகல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. எரியும் கார் திடீரென தங்களை நோக்கி வந்ததால் சுற்றி இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
நல்வாய்ப்பாகச் சரியான நேரத்தில் அனைவரும் காரில் இருந்து தப்பிவிட்டனர். ஒருவரால் மட்டும் தனது பைக்கை சரியான நேரத்தில் இயக்க முடியவில்லை. அவர் சரியான நேரத்தில் தனது பைக்கை போட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். பைக்கின் சக்கரத்தில் மட்டுமே அந்த கார் ஏறிச் சென்றதால் பெரியளவில் விபத்து ஏற்படவில்லை.
என்ன நடந்தது: போலீசார் விசாரணையில் காரின் உரிமையாளர் ஆல்வாரை சேர்ந்த முகேஷ் கோஸ்வாமி என்பது தெரிய வந்தது. இருப்பினும், விபத்து நடந்த போது காரை அவர் ஓட்டவில்லையாம். அவரது நண்பர் ஜிதேந்திர ஜாங்கிட் என்பவரே ஓட்டி இருக்கிறார். காரின் பானட்டில் இருந்து புகை வருவதைக் கவனித்த ஜாங்கிட், காரை மேம்பாலத்திலேயே நிறுத்தினார். காரை விட்டு இறங்கிய உடனேயே கார் தீப்பிடித்து எரியத் தொடங்கிவிட்டது. இதன் பிறகு சில நொடிகளில் கார் தானாக ஓட தொடங்கிவிட்டது. ஜாங்கிட் ஹேண்ட்பிரேக் போட்டே காரை நிறுத்தி இருக்கிறார். ஆனால், தீப்பிடித்ததில் காரின் ஹேண்ட்பிரேக் செயலிழந்துள்ளது. இதன் காரணமாகவே கார் மேலே இருந்து தானாக ஓட தொடங்கியுள்ளது.
தீயணைப்பு வீரர்கள்: சிறிது தூரம் ஓடிய கார் பின்னர் அங்கேயே நின்றுவிட்டது. கார் தொடர்ந்து எரிந்த நிலையில், இது குறித்துத் தீயணைப்பு படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் காரை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். இருப்பினும், கார் முற்றிலும் எரிந்து நாசமானது. அதேநேரம் இந்த தீ விபத்தால் யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.