இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ உடன் முதல் இடத்திற்காகப் போட்டிப்போடும் ஏர்டெல் நிறுவனத்தின் சுனில் மிட்டல் 5ஜி சேவை அறிமுகம் செய்யக் காத்திருக்கும் நிலையில் அதிரடியாக டெலிகாம் கட்டணங்கள் உயர்த்துவது குறித்துப் பேசியுள்ளார்.
5 டெலிகாம் நிறுவனங்கள்
கடந்த 5 வருடத்தில் இந்திய டெலிகாம் சந்தையில் சிறிதும், பெரிதுமாக இருந்த பல டெலிகாம் நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில், தற்போது 2 பொதுத்துறை நிறுவனங்கள், 3 தனியார் நிறுவனங்கள் மட்டுமே உள்ளது.
அதிகளவிலான கடன் சுமை
பொதுத்துறை டெலிகாம் நிறுவனங்கள் அதிகளவிலான கடன் சுமையிலும், குறைந்த அளவிலான வர்த்தகத்தையும் கொண்டுள்ள காரணத்தால் வர்த்தகப் போட்டி அனைத்தும தனியார் நிறுவனங்கள் மத்தியில் தான்.
இந்திய டெலிகாம் சந்தை
இந்திய டெலிகாம் சந்தையில் அதிக வாடிக்கையாளர்கள் பெற வேண்டும் என்ற போட்டியிலும், வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் எனக் கட்டாயத்திலும் இந்தியாவில் இருக்கும் டெலிகாம் நிறுவனங்கள் கட்டணத்தை ஜியோ நிறுவனத்திற்கு இணையாகக் குறைந்தது. அதுமட்டும் அல்லாமல் கடன் மூலம் அதிகளவிலான விரிவாக்கத்தைச் செய்தது.
ஏர்டெல் கட்டண உயர்வு
இப்படியிருக்கும் சூழ்நிலையில், ஏர்டெல் குழுமத்தின் தலைவரான சுனில் மீட்டல், இந்திய டெலிகாம் துறை கடுமையான நெருக்கடியில் உள்ளது, கட்டணத்தைக் கட்டாயம் உயர்த்தியாக வேண்டும். டெலிகாம் கட்டணத்தில் உயர்த்துவதில் ஏர்டெல் எவ்விதமான தயக்கமும் காட்டாது, அதேவேளையில் தனியாகவும் கட்டணத்தை உயர்த்தும் திட்டமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
வோடபோன் ஐடியா கோரிக்கை
சமீபத்தில் வோடபோன் ஐடியா ஏப்ரல் 2022ல் செலுத்த வேண்டிய ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணமான 8,200 கோடி ரூபாயை செலுத்த ஒரு வருடம் மோரோடோரியம் வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்தது.
டெலிகாம் கட்டண வருமானம்
இதுகுறித்து வோடபோன் ஐடியா டெலிகாம் துறையிடம் கூறுகையில், கடந்த 6 மாதமாகப் புதிய முதலீட்டை ஈர்க்க முயற்சித்து வருகிறது. முதலீட்டாளர்களும் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர், ஆனால் டெலிகாம் கட்டணத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் உயர்ந்தால் மட்டுமே முதலீடு செய்ய முடியும் என அறிவித்துள்ளனர்.
டெலிகாம் நிறுவனங்கள்
டெலிகாம் நிறுவனங்கள் செய்துள்ள முதலீடுகள் நஷ்டமாகி வரும் நிலையில், எப்படி டெலிகாம் துறை மேம்படும் என வோடபோன் ஐடியா தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தான் ஏர்டெல் சுனில் மிட்டல் கட்டணத்தை உயர்த்துவது குறித்துப் பேசியுள்ளார்.
ஜியோ வருவதற்கு முன்பு
ஜியோ வருவதற்கு முன்பு ஏர்டெல் நிறுவனத்தில் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் சராசரி வருமானம் (ARPU) 220-230 ரூபாயாக இருந்தது. ஆனால் ஜியோ வந்த பின்பு மொத்த டெலிகாம் துறையின் ARPU அளவீடு 130 ரூபாய் அளவீட்டில் உள்ளது. இது கிட்டதட்ட 6 வருடத்திற்கு முந்தைய அளவீடு எனச் சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார்.
15 ஜிபி டேட்டா
இதேபோல் டெலிகாம் வாடிக்கையாளர்கள் தற்போது மாதத்திற்குக் குறைந்தபட்சம் 15 ஜிபி டேட்டா பயன்படுத்தி வருகிறார்கள். இப்படியிருக்கும் போது ஏதாவது ஒரு விதத்தில் கூடுதல் வருமானம் பெற வேண்டும் எனவும் சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார்.