எல்லை மீறி போகும் பெட்ரோல் விலை.. 100ஐ தொட்டும் 2வது நாளாக தொடரும் விலை உயர்வு..!நேற்றைய விலை உயர்வின் மூலம் டெல்லி உட்பட இந்தியாவின் முக்கியமான நகரங்கள் அனைத்திலும் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ள நிலையில், இனி பெட்ரோல் விலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது தொடர்ந்து இதே விலையில் சில நாட்களாவது இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் கணிப்பில் மண்ணைப் போட்டுள்ளது கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், நேற்றைய விலை உயர்வைத் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி புதிதாக மறுசீரமைப்பு செய்யப்பட்டு உள்ள மத்திய அமைச்சரவையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறைக்குப் புதிதாக ஹார்தீப் சிங் பூர் அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவரது நியமனத்தின் பரிசாக 2வது நாளாகத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளதா என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலை
பொதுவாகப் பெட்ரோல், டீசல் விலையைக் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஒரு நாள் கேப் விட்டு தான் உயர்த்தும் ஆனால் இன்று தொடர்ந்து 2வது நாளாக விலையை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள்
சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் மத்தியிலான பிரச்சனைக்கு மத்தியில் தற்போது கச்சா எண்ணெய் உற்பத்தி OPEC+ கூட்டத்தில் குறிப்பிட அளவை விடவும் அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ள காரணத்தால் கச்சா எண்ணெய் விலை இரண்டு நாட்களாகக் குறைந்து வருகிறது.

கச்சா எண்ணெய் விலை
இதன் மூலம் இன்றைய சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை வர்த்தகத்தில் ஒரு பேரல் WTI கச்சா எண்ணெய் விலை 0.14 சதவீதம் சரிந்து 72.10 டாலருக்கும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.03 உயர்ந்து 73.45 டாலருக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

75 டாலர் விலை
சில நாட்களுக்கு முன்பு கச்சா எண்ணெய் விலை 75 டாலருக்கும் அதிகமாக இருந்த போதும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது, தற்போது கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 2 முதல் 3 டாலர் வரையில் குறைந்தும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு
இன்று மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குக் கீழ் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 35 பைசா முதல் 39 பைசா வரையில் உயர்ந்துள்ளது. இதேபோல் டீசல் விலை 0.09 பைசா முதல் 15 பைசா வரையில் உயர்ந்துள்ளது.

பெட்ரோல் விலை நிலவரம்
இன்றைய விலை உயர்வின் மூலம் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நிலவரம் சென்னை : 101.37 ரூபாய் டெல்லி : 100.56 ரூபாய் கொல்கத்தா : 100.62 ரூபாய் மும்பை : 106.59 ரூபாய் பெங்களூர் : 103.93 ரூபாய் ஹைதராபாத் : 104.50 ரூபாய் கோழிக்கோடு : 100.97 ரூபாய்

டீசல் விலை நிலவரம்
இன்றைய விலை உயர்வின் மூலம் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒரு லிட்டர் டீசல் விலை நிலவரம் சென்னை : 94.15 ரூபாய் டெல்லி : 89.62 ரூபாய் கொல்கத்தா : 92.65 ரூபாய் மும்பை : 97.18 ரூபாய் பெங்களூர் : 94.99 ரூபாய் ஹைதராபாத் : 97.68 ரூபாய் கோழிக்கோடு : 94.75 ரூபாய்