பழங்களின் ராஜா என அழைக்கப்படும் மாம்பழம், இந்தியாவில் எண்ணற்ற வகைகளில் உள்ளது. குமரி முனையில் இருந்து காஷ்மீர் வரையில் ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தது 2 வகை மாம்பழங்கள் உள்ளது.
ஆனால் அத்தனை மாம்பழங்களையும் ஓரம்கட்டியுள்ளது ஜப்பான் நாட்டின் மியாசாகி மாம்பழம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த மாம்பழம் தற்போது இந்தியாவில் வளர்கிறது என்பது தான்.
இப்படி இந்த மாம்பழத்தில் என்ன ஸ்பெஷல்..?!
ஜப்பான் மியாசாகி மாம்பழம்
உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த மாம்பழம் என்றால் அது ஜப்பான் நாட்டின் மியாசாகி மாம்பழம் தான். ஜப்பான் நாட்டின் குட்டி நகரமாக மியாசாகி-யில் வளரும் இந்த மாம்பழம் ஒன்று 350 கிராம் எடையும், 15 சதவீதம் அதிக இனிப்பாகவும் இருக்கும்.
மியாசாகி மாம்பழத்தின் நிறம்
அனைத்திற்கும் மேலாக இந்த மாம்பழம் மஞ்சளாகவோ, சிவப்பாகவோ, பச்சையாகவோ இருக்காது. மொத்த மாம்பழம் பிளேமிங் ரெட் என்ற நிறத்திலும், டைனோசர் முட்டை வடிவிலும் இருக்கும். இதுதான் இந்த மியாசாகி மாம்பழத்தின் தனிச் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.
மியாசாகி மாம்பழத்தின் விலை
மியாசாகி மாம்பழத்தின் நிறம், வடிவம் ஆகியவை வித்தியாசமாகவும், எண்ணிக்கையில் மிகவும் குறைவாகவும் இருக்கும் காரணத்தால் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
மியாசாகி மாம்பழத்தின் கட்டுப்பாடுகள்
மியாசாகி மாம்பழம் முழுமையான தரம், நிறம் ஆகியவை அடையச் சூரிய ஒளி அதிக நேரமும், சரியான தட்பவெப்ப நிலையும், அதிகப்படியான மழையும் தேவை. இது மட்டும் அல்லாமல் மியாசாகி மாம்பழம் முழுவதும் ஒரே நிறம் அடைவதற்கு ஒவ்வொரு மாம்பழத்திற்குத் தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு வலை போட வேண்டும்.
3 லட்சம் ரூபாய் விலை
தற்போது சந்தைக்கு வந்துள்ள மியாசாகி மாம்பழம் அதிகப்படியான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. 2 மாம்பழம் அடங்கிய ஒரு பெட்டி 8,600 ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய பிரதேசத்தில் மியாசாகி மாம்பழம்
இந்தியாவில் தற்போது மத்திய பிரதேசம் மாநிலத்தில் மியாசாகி மாம்பழம் வளர்ந்து வருகிறது. மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்தவர் சங்கல்ப் பரிஹார். இவரது மனைவி ராணி. இவர்கள் தங்களுடைய தோட்டத்தில் மாம்பழ கன்றுகளை நட்டு வைத்து வளர்த்து வந்துள்ளார்கள். அதில் ஒரு மாமரக்கன்று ஜப்பானின் மியாசாகி மாம்பழங்களுக்குச் சொந்தமானது என்பது அவர்களுக்குத் தெரியாது.
மியாசாகி மாம்பழம் வைரல்
தற்போது சமுகவலைதளத்தில் மியாசாகி மாம்பழம் பிரபலம் அடைந்த நிலையில் சங்கல்ப் பரிஹார் – ராணி தம்பதியினர் தங்களது தோட்டத்தில் வளர்ந்துள்ள 7 மியாசாகி மாம்பழங்களைத் திருடர்களிடமிருந்து காப்பாற்ற இவர்கள் 4 பாது காவலர்களையும் 6 நாய்களையும் தங்கள் பழத்தோட்டத்தைப் பாதுகாக்க 24 மணி நேரமும் பாதுகாப்புக்கு வைத்துள்ளனர்.
சென்னையில் ரயில்
இந்த மாங்கன்றுகள் எப்படிக் கிடைத்தது என்ற கேள்விக்குச் சங்கல்ப் பரிஹார், சென்னையில் ரயிலில் ஒரு மனிதரை சந்தித்தேன், எனக்கு இரண்டு அரிய ஜப்பானிய மா மரக்கன்றுகளை வழங்கினார். ஆரம்பத்தில், எனக்கு இந்த மாம்பழ வகைக் குறித்துத் தெரியாது. மரக்கன்றுகளைக் கொடுத்தவரின் தாயாரான தமினியின் பெயரால் இந்த மாம்பழங்களை அழைத்து வருகிறேன்.
திருடர்கள் அதிகம்
இந்த மாம்பழ வகை குறித்து அறிந்த சில திருடர்கள் கடந்த ஆண்டுத் திருடி சென்றுவிட்டார்கள், இந்த ஆண்டு, பாதுகாப்புக்கு ஆட்களை நியமித்துள்ளோம். எங்களுக்கு மாம்பழங்களை விற்கும் திட்டம் இல்லை. விதைகளைப் பயன்படுத்தி அதிக மரங்களை வளர்க்கப் போகிறோம்” என்றார்.