லக்னோ/போபால்/ஜெய்ப்பூர்: உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் நேற்று ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் மின்னல் தாக்கிய சம்பவங்களில் மொத்தம் 68 பேர் பலியாகி உள்ளனர். இந்த துயர சம்பவங்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று கனமழை கொட்டியது. அப்போது பல இடங்களில் மின்னல் தாக்கியது. இதில் மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர்
உ.பி.யின் பிரக்யராஜில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சம்பவங்களில் 14 பேர் பலியாகினர். கான்பூர், பதேபூர் மாவட்டங்களில் மொத்தம் 10 பேர் மின்னல் தாக்கி மாண்டனர். கெளசாம்பியில் 4 பேரும் பிர்சோபாத்தில் 3 பேரும் மின்னலுக்கு பலியாகினர். மின்னல் தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு உதவ முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளர்.
இதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தில் மின்னல் தாக்கி 20 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ஜெய்ப்பூரில் மட்டும் மின்னல் தாக்கியதில் 11 பேர் இறந்துள்ளனர். மின்னல் தாக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ5 லட்சம் நிதி உதவி வழங்க ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளிலும் நேற்று மின்னல் தாக்கியது. இதில் 7 பேர் மரணம் அடைந்தனர். மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவங்களுக்கு பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.