டெல்லி: பெகாசஸ் உளவு பார்த்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று காலை முதல் பெரும் அமளி ஏற்பட்டது. இதை தொடர்ந்து ராஜ்யசபா மதியம் 12 மணி வரையிலும், லோக்சபா மதியம் 2 மணி வரையிலும் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
இஸ்ரேலை சேர்ந்த இந்த உளவு சாப்ட்வேர் மூலமாக இந்தியாவில் ராகுல் காந்தி, 2 மத்திய அமைச்சர்கள், பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட பலரது செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை முதல் வரிசையாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவைச் சேர்ந்த தி வயர் என்ற ஆன்லைன் செய்தி நிறுவனம் மற்றும் உலகின் முன்னணி ஊடக குழுமங்கள் இணைந்து இந்த செய்திகளை வெளியிட்டபடி உள்ளன.
இரு அவைகளிலும் கொந்தளிப்பு
இந்த விவகாரம் நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது. இதையடுத்து முழு அலுவல்கள் நடைபெறவில்லை. இதையடுத்து இன்றைய தினம் காலை நாடாளுமன்றம் கூடியதும் ராஜ்யசபாவில் ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங், ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு பூஜ்யம் நேரத்தில் உளவு விஷயம் தொடர்பாக விவாதம் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
தனி நபர் சுதந்திரம்
தனிநபர் சுதந்திரம் இங்கே நசுக்கப்பட்டு இருக்கிறது என்று அவர் குற்றம் சாட்டினார். பிற கட்சி உறுப்பினர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியதால் அவையில் வேறு நடவடிக்கைகள் எதையும் நடத்த முடியவில்லை. எனவே ராஜ்யசபா மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
சபாநாயகர் இருக்கை முன்பு குவிந்தனர்
இதே பிரச்சினைக்காக லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பினர். அங்கும் வேறு அலுவல்கள் நடத்த முடியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பினர் . சபாநாயகர் இருக்கையில் எதிரே உள்ள வெல் பகுதிக்கு அவர்கள் சென்று தர்ணா நடத்தினர்.
மோடி பதவி விலக கோரிக்கை
“உளவு பார்க்கும் அரசு” என்று கூறி கோஷங்கள் எழுப்பினர். சிலர் பதாகைகளை ஏந்தி நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர். சபாநாயகர் ஓம் பிர்லா மீண்டும், மீண்டும், உறுப்பினர்களை இருக்கைக்கு திரும்புமாறு கேட்டுக் கொண்டும், கோஷங்கள் அதிகரித்துக் கொண்டே சென்றதால் மதியம் 2 மணி வரை லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.