சண்டிகர்: பஞ்சாப் மாநில முதல்வரான பகவந்த் மான் தனது 48 வயதில் 2வது திருமணம் செய்து கொள்கிறார். இவர் கரம் பிடிக்க உள்ள 32 வயது குர்ப்ரீத் கவுர் விவசாயியின் மகளாக பிறந்து டாக்டர் படிப்பை முடித்தவர் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
பஞ்சாப் மாநில சட்டசபைக்கு கடந்த பிப்ரவரியில் தேர்தல் நடந்தது. இதில் ஆம்ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 92ல் ஆம்ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இதன்மூலம் டெல்லியை தொடர்ந்து பஞ்சாப்பிலும் ஆம்ஆத்மி ஆட்சி கட்டிலில் அமர்ந்தது.
முதல்வருக்கு 2வது திருமணம் பஞ்சாப் மாநில முதல்வராக 48 வயது நிரம்பிய பகவந்த் மான் பொறுப்பேற்றார். இந்நிலையில் முதல்வர் பகவந்த் மான் இன்று 2வது திருமணம் செய்து கொள்ள உள்ளார். இவர் டாக்டரான குர்ப்ரீத் கவுர் என்பவரை கரம் பிடிக்கிறார். இவர்களின் திருமணம் சண்டிகரில் உள்ள பகவந்த் மானின் வீட்டில் வைத்து எளிமையான முறையில் நடைபெறுகிறது.பகவந்த் மான்-குர்ப்ரீத் கவுர் திருமணத்தில் ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்க உள்ளார். இவர் உள்பட சில தலைவர்களோடு குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்க உள்ளனர்.