சென்னை: சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவாக ஆன பின்னர் எப்போதுமே தொகுதி பக்கம் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில் தடுப்பூசி தொடர்பாக வெளியான ஒரு செய்தி அவரை மிகவும் கோபப்பட வைத்துள்ளது.
அப்படி என்ன செய்தி என்கிறீர்களா.. தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு இருக்கும் போது, சேப்பாக்கம் தொகுதியில் மட்டும் எப்படி தடுப்பூசி செலுத்துகிறார்கள் என்று யாரோ சிலர் கிளப்பிவிட்டு உள்ளார்கள்.
இதனால் கடுப்பான உதயநிதி அதற்கான விளக்கத்தை இன்றைய பேட்டியில் அளித்துள்ளார்- அத்துடன் நீட் தேர்வு தொடர்பான விமர்சனங்களுக்கும் பதில் அளித்துள்ளார்
கல்வி உதவித்தொகை
எங்கு இந்த பேட்டி அளித்தார் என்றால் சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி சார்பாக ஏழை எளிய மாணவர்கள் கல்வி உதவித்தொகை அளிக்கும் விழா நடந்தது. அப்போது சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கினார். அப்போதுதான் இந்த பேட்டி அளித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்
உரிமை உள்ளது
செய்தியாளர்கள் நீட் தேர்வு குழு அமைத்தற்கு மத்திய அரசு எதிர்க்கிறதே என்று கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் அளித்து உதயநிதி ஸ்டாலின், பேசும் போது, தமிழக அரசுக்கும் உரிமை உள்ளது என்பதுதான் எங்களின் எண்ணம். நீட் வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து அமைக்கப்பட்டுள்ள குழுவல்ல நீட் தேர்வினால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய்வதற்காக நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
நல்ல முடிவு
திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பிலும் நீட் தேர்வினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மனு அளித்துள்ளோம். திமுக தேர்தல் அறிக்கையிலும் நீட் தேர்வு குறித்து தெரிவித்திருந்தோம். மாணவர்கள், பெற்றோர்களுக்கு குழப்பத்தை உருவாக்க விரும்பவில்லை. நீட் தேர்வு குறித்து விரைவில் முதலமைச்சர் நல்ல முடிவை அறிவிப்பார் என்றார்.
உதயநிதி பேட்டி
அப்படியே இன்னொரு விஷயத்தையும் செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின், அதாவது தமிழகம் முழுவதும் தடுப்பூசி தட்டுப்பாடு இருக்கும் போது, சேப்பாக்கம் தொகுதியில் மட்டும் எப்படி செலுத்துகிறார்கள் என்று யாரோ தேவையில்லாத செய்திகளை பரப்புகின்றனர். பல தனியார் மருத்துவமனைகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இந்த தொகுதிக்கு மருந்துகளை அளித்து வருகிறார்கள். மேலும் தடுப்பூசியை பெற்றுத்தர முடியாதவர்கள்(வக்கில்லாத சிலர்) தான் இதுபோன்று பேசி வருகிறார்கள்” என்று கோபமாக கூறினார்.
கொழுத்திப்போட்டனர்
உதயநிதி ஸ்டாலின் இப்படி கோபப்பட காரணம் இல்லாமல் இல்லை. ஏனெனில் ஒவ்வொரு தெருவாக சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டு உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தினமும் தொகுதிக்கு ஆய்வு செய்து, ஆட்டோவில் பயணிப்பது, ஏழைகளின் வீடுகளுக்குள் சர்வசாதாரணமாக சென்று அவர்களில் ஒருவரைப்போல் நலம் விசாரிப்பது,. குப்பைகளை அகற்ற உத்தரவிடுவது, கழிவறைகளை ஆய்வு செய்து, தடுப்பூசி குறித்து ஆய்வு செய்து என்று பெரிய அளவில் தலைப்பு செய்தியாக உதயநிதி வந்தார். இதை பார்த்து கடுப்பான சிலர், தமிழகம் முழுவதும் தடுப்பூசி தட்டுப்பாடு இருக்கும் போது, சேப்பாக்கம் தொகுதியில் மட்டும் எப்படி செலுத்துகிறார்கள் என்று கேள்வி எழுப்பியதுடன் மற்ற தொகுதி மக்கள் உதயநிதி மேல் கோபமாக இருப்பதாவும் கொளுத்தி போட்டனர். இதுதான் அவரது கோபத்திற்கு காரணம்.