சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், உடல் நலம் பற்றி விசாரிப்பதற்கு ஒரே நேரத்தில் மருத்துவமனைக்கு எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின், தோழி சசிகலா ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் வருகை தந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக அவைத் தலைவராக இருக்கக் கூடியவர் மதுசூதனன். அந்த கட்சியில் மிக முக்கியமான பொறுப்பு இதுவாகும்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓ பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் தொடங்கியபோது அவருக்கு முதலில் ஆதரவளித்த தலைவர்களில் முக்கியமானவர் மதுசூதனன்.
மதுசூதனன் உடல்நிலை
வயது மூப்பு காரணமாக அடிக்கடி உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார் மதுசூதனன். கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று தகவல் வெளியான நிலையில் அவர் நல்ல நிலையில் இருப்பதாக இன்று அதிமுக உறுதி செய்தது.
ஒரே நேரத்தில் இருவரும்
இந்த நிலையில்தான் மதுசூதனன் உடல்நிலை பற்றி விசாரிப்பதற்காக எடப்பாடி பழனிசாமி இன்று அப்பல்லோ மருத்துவமனை சென்று இருந்தார். அங்கு மருத்துவர்களிடம் மதுசூதனன் உடல்நிலை பற்றி கேட்டறிந்தார். அதே நேரத்தில் இன்னொரு வாகனத்தில் சசிகலா அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். அவர் தனது காரின் முகப்பில் அதிமுக கொடி கட்டி இருந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சந்திப்பார்களா என எதிர்பார்ப்பு
இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வார்கள், பரஸ்பரம் வணக்கம் செலுத்துவார்கள், அல்லது முகத்தை பார்க்காமல் திரும்பி கொண்டு செல்வார்களா என்ற எதிர்பார்ப்பு அங்கிருந்த பத்திரிகையாளர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால், எடப்பாடி பழனிசாமி அதே நேரம் மருத்துவமனையில் இருந்து வெளியே கிளம்பினார். அதுவரை சசிகலா காரில் வெளியே காத்திருந்தார். எடப்பாடி பழனிச்சாமியும், சசிகலா வந்த தகவல் அறிந்ததும், அவசர அவசரமாக அங்கேயிருந்து கிளம்பினார். இதன் காரணமாக இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளவில்லை. ஆனால் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் இருவரும் அங்கே வந்து இருந்தனர். இதனால் அப்பல்லோ மருத்துவமனை வளாகம் பரபரப்பாக மாற்றியது.
பரபரப்பு சூழ்நிலை
சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் சம்மந்தம் கிடையாது என்று நேற்று கூட சேலத்தில் பேட்டி அளித்து இருந்தார் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில்தான் அதிமுக கொடியுடன் சசிகலா, எடப்பாடி பழனிசாமி இருந்த மருத்துவமனைக்கு வருகை தந்திருந்த மருத்துவமனைக்கு வந்து இருக்கிறார். இதனால் ஓரளவுக்கு அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது என்று சொல்லலாம்.
அதிமுக நிலை
அதிமுக நிர்வாகிகளுடன் தொலைபேசியில் உரையாடி ஆடியோ வெளியிட்டு வந்தார் சசிகலா. அவருடன் பேசிய அனைவரும் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனை, சசிகலா நேரில் சென்று பார்த்து இருக்கிறார். இதற்கு அதிமுக தலைமை எப்படி அனுமதி கொடுத்தது என்ற கேள்விகளை அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன.