கோவையில் நடந்த திமுக செயற்குழு கூட்டத்தில் இருதரப்பினரிடையே எழுந்த மோதலால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே கைப்பற்றின. குறிப்பாக, கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் திமுக கூட்டணி 96 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. அதேபோல, நகராட்சி, பேரூராட்சிகளையும் வென்றது.

இதன்மூலம், முதல்முறையாக கோவை மாநகராட்சியின் மேயர் பதவியில் திமுகவைச் சேர்ந்தவர் தேர்வு செய்யப்பட உள்ளார். 50க்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருந்தாலும், முன்னாள் எம்எல்ஏவும், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான நா. கார்த்திக்கின் மனைவி இலக்குமி இளஞ்செல்வி, கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சேனாதிபதியின் 22 வயது மகளான நிவேதா ஆகியோர் மேயர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் உள்ளனர். அதோடு, அனுபவமிக்க கவுன்சிலரான மீனா லோகுவும் மேயர் போட்டியில் இருக்கிறார்.

முன்னதாக, மேயர் பதவி கனவில் வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னதாகவே, தனக்கு தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் திமுக மகளிர் தொண்டரணி நிர்வாகி மீனா ஜெயக்குமார், தனது வார்டில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். ஆனால், திமுக தலைமை அவருக்கு சீட் கொடுக்காமல் ஏமாற்றியது. இதனால், அவர் பெரிதும் அப்செட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில், மின்சாரத்துறை அமைச்சரும், கோவை மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சேனாதிபதி உள்பட பலர் இருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் தேர்தலில் சீட் கிடைக்காத விரக்தியை மீனா ஜெயக்குமார் வெளிப்படுத்தினார். அப்போது, திமுக நிர்வாகி நா.கார்த்திக்கை அவர் கடுமையாக பேசியதாகக் கூறப்படுகிறது. அவர் கூறியதாவது, உங்க பொண்டாட்டிக்கு சீட் கிடைப்பதற்காக என்னை தேர்தலில் போட்டியிட முடியாதவாறு செய்து விட்டார். என்னுடைய வளர்ச்சியை தடுக்க இவரு யாரு..? என்று கேள்வி எழுப்பினார். இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

அப்போது, தலையிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி உங்களுடைய பிரச்சனைகளை கடிதமாக எழுதி கொடுத்தால், தலைமையிடம் பேசத் தயார், எனக் கூறினார். இருப்பினும் மீனா ஜெயக்குமார் விடவில்லை. தொடர்ந்து, அவர் பேசியதால் திமுக செயற்குழு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.