சென்னை: ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள போதும் கொரோனா நிதியுதவிகளை அணிகள் வாரி வழங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் கோர தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் பலரும் ஆக்சிஜன், மருத்துவமனை படுக்கைகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
இவர்களுக்காக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ஐபிஎல் அணிகள் வழங்கிய நிதியுதவிகள் குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
சிஎஸ்கே
ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தமிழக மக்கள் கொரோனாவை எதிர்த்து போராடிட 450 ஆக்சிஜன் செரிவூட்டிகளை வழங்கியுள்ளது. இந்த செரிவூட்டிகளை அந்த அணியின் உரிமையாளர் சீனிவாசன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்படைத்தார். அதே போல அந்த அணி சமூக வலைதளங்கள் மூலம் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. எனினும் கேப்டன் தோனி இதுகுறித்து இன்னும் வாய்த்திறக்கவில்லை.
ஐதராபாத் அணி
சன் குழுமத்தை சேர்ந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்காக ரூ.30 கோடி நிதியுதவி செய்துள்ளது. இந்த தொகையானது கொரோனாவுக்கு எதிராக செயல்பட்டு வரும் மத்திய, மாநில அரசுகளுக்கும், தனியார் சமூக செயல்பாட்டு அமைப்புகளுக்கும் பிரித்து வழங்கப்படவுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ்
இந்த அணி சார்பில் கடந்த ஏப்ரல் 29ம் தேதி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் அணி வீரர்கள், நிர்வாகம் மற்றும் உரிமையாளர்கள் இணைந்து கொரோனா நிதியுதவியாக ரூ.7.5 கோடி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. ராஜஸ்தான் அணி தனது வீரர்களுடன் சேர்ந்து எடுத்த இந்த முடிவு மற்ற அணிகளும் நிதியுதவி செய்ய தொடக்கமாக அமைந்தது.
டெல்லி அணி
இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட டெல்லி அணி மற்றும் வீரர்கள் சிலர் சேர்ந்து ஹெம்குண்ட் மற்றும் உடாய் அமைப்புகளுக்கு .1.5 கோடி நிதியுதவி செய்துள்ளனர். இந்த அமைப்புகளானது நாடு முழுவதும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கான உதவிகளை செய்து வருகிறது.
மும்பை அணி
அம்பானியின் ரிலையன்ஸ் குழும அறக்கட்டளையானது, வரும் மே 15ம் தேதி முதல் மும்பையில் 100 ஐசியூ பிரிவு படுக்கைகளை ஏற்படுத்தி மக்களுக்கு சேவை செய்யவுள்ளது. அந்நிறுவனத்தின் மருத்துவமனையில் 650 படுக்கைகளை கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கியுள்ளது. இங்கு மருத்துவர்கள், செவிலியர்கள் என மொத்தம் 500 முன்களப்பணியாளார்கள் பணியில் ஈடுபடவுள்ளனர். இங்கு அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கான மொத்த செலவையும் ரிலையன்ஸ் அறக்கட்டளையே ஏற்கவுள்ளது.
பெங்களூரு
இந்த அணி சார்பில் இதுவரை எந்த நிதியுதவியும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா இணைந்து நிதியுதவி திரட்டும் வலைதளம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர். அதில் முதல் ஆளாக அவர்கள் ரூ.2 கோடி நிதியுதவி செய்துள்ளனர். இதில் ஆர்சிபி வீரர் யுவேந்திர சாஹலும் ரூ.95,000 உதவி செய்துள்ளார். இந்த தொகையானது கெட்டோ என்ற தன்னார்வ அமைப்புக்கு செல்லவுள்ளது.
தனி நபர் உதவிகள்
இதுமட்டுமல்லாமல் கிரிக்கெட் வீரர்கள் ஷிகர் தவான் , ஜெய்தேவ் உனத்கட், நிகோலஸ் பூரண், பேட் கம்மின்ஸ், ரிஷப் பண்ட், முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட வீரர்களும் தனிப்பட்ட முறையில் கொரோனா நிதியுதவிகளை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.