Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

இவர்தான் “தகைசால் தமிழர்..” விருது பணம் 10 லட்சத்தை அப்படியே கொரோனா நிவாரணத்திற்கு அளித்த சங்கரய்யா

jpg-1

சென்னை: தமிழக அரசின் “தகைசால் தமிழர்” (Thagaisal Thamizhar) விருது மூலம் தனக்கு கிடைக்கும் 10 லட்சம் ரூபாயை அப்படியே மொத்தமாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் என்.சங்கரய்யா அறிவித்துள்ளார்.

தமிழகத்துக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தகைசால் தமிழர் என்ற புதிய விருதை உருவாக்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

இந்த விருது உருவாக்கப்பட்டதும் முதலாவதாக இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது, கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் சங்கரய்யாவிற்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தகைசால் தமிழர்

ஆகஸ்ட் 15ம் தேதி, சுதந்திர தினத்தன்று, சங்கரய்யாவிற்கு இந்த விருதை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்க உள்ளார். இந்த விருதுடன் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவின்போது முதல்வரால் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு மாணவர் தலைவராகவும் , சுதந்திர போராளியாகவும், சட்டசபை உறுப்பினராகவும் பணியாற்றியவர் சங்கரய்யா.

சங்கரய்யாவிற்கு விருது

தமிழ்நாட்டுக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி, சமீபத்தில் 100 வயதை அடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என் .சங்கரய்யா அவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக, தகைசால் தமிழர் விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு இந்த விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ரூ.10 லட்சம்

இந்த நிலையில்தான், தகைசால் தமிழர் விருது தொகையான 10 லட்சம் ரூபாயை அப்படியே முதலமைச்சர் நிவாரண நிதி வழங்குவதாக சங்கரய்யா அறிவித்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும், தியாகி ஓய்வூதியத்தை கூட வாங்கக் கூடாது என்ற கொள்கை கொண்டவர் சங்கரய்யா. இத்தனை வயதிலும், அவர் தனது கொள்கையில் இருந்து ஒரு இம்மியளவு கூட நகரவில்லை என்பதை இந்த சம்பவம் மீண்டும் இந்த இளம் தலைமுறைக்கு உணர்த்துவதாக அமைந்துள்ளது . பணம் மட்டும் தான் வாழ்க்கை என்று அதன் பின்னால் ஓடிக் கொண்டிருக்கும் இந்த சமுதாயத்திற்கு சங்கரய்யா வாழ்க்கை ஒரு மிகப்பெரிய பாடம் என்று சொன்னால் அது மிகையில்லை.

முதல்வருக்கு நன்றி

இதோ என்.சங்கரய்யா விடுத்துள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ள ‘தகைசால் தமிழர் விருதினை இந்தாண்டுக்கு எனக்கு வழங்குவதாக மாண்புமிகு, தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்கள். எனது சேவையை பாராட்டும் வகையில், அறிவிக்கப்பட்டுள்ள இவ்விருதினை ஏற்றுக் கொள்வதோடு, எனக்கு இந்த விருதினை அளித்திருக்கிற மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுரண்டலற்ற சமூகத்திற்காக உழைப்பேன்

இந்த விருதிற்காக அளிக்கப்படும் ரூ. 10 லட்சம் தொகையினை கோவிட் 19 பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழக அரசு திரட்டி வரும் முதலமைச்சரின் கோவிட் 19 பேரிடர் நிவாரண நிதிக்கு மகிழ்ச்சியோடு வழங்குகிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவனாக இருந்த காலந்தொட்டு இன்று வரை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கும், இந்திய நாட்டின் விடுதலைக்கும், உழைப்பாளி மக்கள் நலன் காத்திடவும், என்னால் முடிந்தளவு பணியாற்றியுள்ளேன். சுரண்டலற்ற பொதுவுடமை சமுதாயத்தை உருவாக்க நான் ஏற்றுக் கொண்ட மார்க்சிய கொள்கையின் அடிப்படையில் பயணம் செய்துள்ளேன். எனது இறுதி மூச்சு வரை இப்பணியை தொடர்ந்து நிறைவேற்றுவேன். என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு என்.சங்கரய்யா தெரிவித்துள்ளார்.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp