பிரிஸ்பேன்: டெல்டா கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சிட்னி, பெர்த், டார்வின், பிரிஸ்பேன் ஆகிய நான்கு முக்கிய நகரங்களில் ஊரடங்கை ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது. அப்படி உருமாறிய டெல்டா கொரோனா வகை தான் இந்தியாவில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த டெல்டா கொரோனா வகை தற்போது பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ளது. இதனால் கொரோனா பரவலின் அடுத்த அலை ஏற்படும் என அஞ்சப்படுகிறது.
ஆஸ்திரேலியா
கொரோனா பரவலை மிகச் சிறப்பாகக் கையாண்ட மாநிலங்களில் ஒன்று ஆஸ்திரேலியா. வெளிநாட்டுப் போக்குவரத்திற்குத் தடை, கடுமையான தனிமைப்படுத்துதல் விதிகள், ஊரடங்கு உள்ளிட்டவை காரணமாக அங்கு கொரோனா பாதிப்பு எளிதில் கட்டுப்படுத்தப்பட்டது. பல மாதங்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு ஆஸ்திரேலியாவில் மிகக் குறைவாகவே இருந்தது.
கொரோனா பாதிப்பு
இதனிடையே அங்குக் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய டெல்டா கொரோனா வகை தான் அங்குப் பரவுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். ஆஸ்திரேலியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாகவும் வெளிநாட்டில் இருந்து வருபவர்களே வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதாகவும் குயின்ஸ்லாந்து கவர்னர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஊரடங்கு
இதனால் ஆஸ்திரேலியாவின் சிட்னி, பெர்த், டார்வின், பிரிஸ்பேன் ஆகிய நான்கு முக்கிய நகரங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக அப்பகுதியில் வசிக்கும் ஒரு கோடி பேர் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் மிகப் பெரிய நகரமான சிட்னியில் கடந்த சில வாரங்களில் மட்டும் 150 பேருக்கு திடீரென வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பழங்குடியினர் வாழும் சில பகுதிகளிலும் வைரஸ் பரவியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேக்சின் பணிகள்
பிரிஸ்பேனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் செவிலியர் ஒருவர், தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் அருகிலிருக்கும் மற்றொரு நகருக்குச் சென்று 10 நாட்கள் தங்கியுள்ளார். அதன் பிறகே அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் மூலம் எத்தனை பேருக்கு கொரோனா பரவியது என்பதைக் கண்டறிய அந்நாட்டு அரசு முயன்று வருகிறது. அங்கு மக்கள் தொகையில் வெறும் 5% பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், மந்தமாக நடைபெறும் வேக்சின் பணிகள் காரணமாகவே மீண்டும் வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதாகப் பலர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
நியூசிலாந்து அரசு
அரசு மீதான அதிருப்தி அதிகரித்ததைத் தொடர்ந்து, சில குறிப்பிட்ட பிரிவினருக்குத் தடுப்பூசிகளைக் கட்டாயமாக்கி அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மாரிசன் உத்தரவிட்டுள்ளார். அங்கு பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு காரணமாக ஆஸ்திரேலியா நாட்டுடனான போக்குவரத்திற்கு ஜூலை 5 வரை நியூசிலாந்து தடை விதித்துள்ளது.