ஆப்கானிஸ்தான் நாட்டைத் தாலிபான்கள் கைப்பற்றிய பின்பு அந்நாட்டில் இந்திய அரசு செய்துள்ள முதலீடுகள், இந்திய நிறுவனங்களின் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு போராட்டங்களுக்குப் பின்பு அந்நாட்டில் இருந்து இந்தியர்களைப் பாதுகாப்பாக இந்தியாவிற்கு கொண்டு வரும் நிலையில் தற்போது புதிதாக ஒரு பிரச்சனை ஆப்கானிஸ்தான் நாட்டிற்கும் இந்தியாவிற்கும் உருவாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பின்பு இந்தியாவிற்கு அந்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் பொருட்களைத் திடீரென நிறுத்தியுள்ளது.
இந்தியா – ஆப்கானிஸ்தான் வர்த்தகம்
இந்திய அரசு ஆப்கானிஸ்தான் நாட்டு உடனான வர்த்தகத்தை மேம்படுத்தப் பல ஆண்டுகளாகப் பல்வேறு முதலீடுகள், வரித் தளர்வுகள், வர்த்தக ஒப்பந்தங்கள் செய்து வந்தது. இதில் முக்கியமான ஒன்று தான் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து நீண்ட கால முறையில் ஏற்றுமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் ஒப்பந்தம்.
இறக்குமதி வரியில் தளர்வு
இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவும் சரி, ஆப்கானிஸ்தானும் சரி அதிகப்படியான பலன்களை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக, அந்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பெருங்காயம், சீரகம், அத்தி, பாதாமி , பச்சை மற்றும் கருப்பு திராட்சை ஆகியவற்றுக்கு இந்தியாவில் இறக்குமதி வரி குறைக்கப்பட்டது.
நீண்ட கால ஒப்பந்தம்
இது நீண்ட கால ஒப்பந்தம் என்பதால் இந்திய வர்த்தகர்கள் அதிகமானோர் அதிகளவில் ஆப்கானிஸ்தானில் இருந்து பல உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து வந்தனர். தற்போது தாலிபான்கள் இந்த உணவுப் பொருட்கள் ஏற்றுமதியைத் தடுத்து நிறுத்தியுள்ளது.
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் வழித்தடம்
ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தாலிபான்கள் தரை வழி வர்த்தகம் செய்ய ஏதுவான பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் வழித்தடத்தை மூடியுள்ளதால் இந்தியாவில் – ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு மத்தியிலான வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி
இதனால் இரு நாட்டின் ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் புதிய வழித்தடத்தைத் தேடுவது மட்டுமல்லாமல் புதிய விநியோகஸ்தர்களைத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.
விலை உயரும்
இதனால் செலவுகளும் விலையும் அதிகரிக்கும் என்பதால் இனி வரும் காலகட்டத்தில் பெருங்காயம், சீரகம், அத்தி, பாதாமி, பச்சை மற்றும் கருப்புத் திராட்சை ஆகியவற்றின் விலை உயர அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
ஆப்கானிஸ்தான் ஆதிக்கம்
இந்தியா பாதாமி (Apricot) பழத்தை ஈரான், துருக்கி, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தாலும், 2021ஆம் நிதியாண்டில் சுமார் 85 சதவீதம் உலர்ந்த பாதாமி பழங்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்துதான் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.
அத்தி பழம், பெருங்காயம்
இதேபோல் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் 99 சதவீதம் அத்திப் பழங்கள், 80 சதவீதம் பெருங்காயம் ஆகியவை ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து தான் வருகிறது. இதோடு பிஸ்தா, பாதாம் மற்றும் சில மசாலா பொருட்களும் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது.
தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான்
ஆப்கானிஸ்தானை விட்டால் ஈரான் நாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்ய வேண்டும், இல்லையெனில் தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யலாம். ஆனால் இந்நாட்டு உடன் எவ்விதமான வர்த்தக ஒப்பந்தங்களும் இல்லை.
தீபாவளி பண்டிகை
இதுவரை வரவேண்டிய ஆர்டர்கள் குறித்து நிலவரம் முழுமையாகத் தெரியாத நிலையில், தீபாவளி பண்டிகைக்குள் இந்த நிலையைச் சரி செய்ய வேண்டும். இல்லையெனில் உணவுப் பொருட்களின் விலை குறைந்தபட்சம் 10 முதல் 15 சதவீதம் வரையில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.