கொரோனா வைரஸ் தோன்றிய போது எப்படி இருந்ததோ, அதேப் போல் இப்போது இல்லை. இன்று வரை உலகின் பல பகுதிகளில் பலவாறு உருமாற்றமடைந்து ஏராளமான உயிர்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது உத்திர பிரதேசத்தில் கொரோனாவின் கப்பா மாறுபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள 2 வழக்குகள் பதிவாகியுள்ளது.
லக்னோவின் கிங் ஜார்ஜ் மருத்துவ கல்லூரியில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 109 பேரின் இரத்த மாதிரிகளை மரபணு வரிசைப்படுத்தும் போது, அவர்களுள் இருவருக்கு கொரோனாவின் கப்பா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய 107 பேருக்கு டெல்டா பிளஸ் தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இப்போது இந்த கொரோனாவின் கப்பா மாறுபாட்டை குறித்து விரிவாக காண்போம்.
கப்பா மாறுபாடு என்றால் என்ன?
கப்பா என்பது கொரோனாவின் புதிய மாறுபாடு அல்ல. SARS-Cov-2 ஐ கண்காணித்துக் கொண்டிருக்கும் உலக சுகாதார அமைப்புகளின் தளத்தின் படி, கப்பா மாறுபாடு என்பது இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இந்த கப்பா மாறுபாடு B.1.617.1 என்றும், டெல்டா B.1.617.2 ஆகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது கவலையின் மாறுபாடா (VOC)?
தற்போது உலக சுகாதார அமைப்பு இந்த B.1.617.1 என்னும் கப்பா மாறுபாட்டை கவலையின் மாறுபாடாக வகைப்படுத்தவில்லை. ஏற்கனவே உலகம் முழுவதும் சுமார் 30 நாடுகளுக்கும் பரவியிருக்கும் லாம்டா மாறுபாட்டை போலவே, கப்பாவும் ஒரு ஆர்வத்தின் மாறுபாடாகும்.
இது இரட்டை விகாரமா?
ஆம், டெல்டாவைப் போலவே, கப்பாவும் இரட்டை விகார மாறுபாடு ஆகும். ஏனெனில் இது EE484Q மற்றும் L452R ஆகிய இரண்டு பிறழ்வுகளைக் கொண்டுள்ளது. மேலும் இந்த கப்பா மாறுபாடு ஒரு புதிய மாறுபாடு அல்ல, இது சில காலமாகவே உள்ளது. ஆனால் இப்போது தான் இது வெளியே தெரிகிறது.
இந்தியாவில் முதல் கப்பா வழக்குகள் இவை தானா?
இல்லை, கப்பா மாறுபாடு 2020 ஆம் ஆண்டு அக்டோபரிலேயே இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இந்த 2 வழக்குகள் இவற்றின் முதல் நிகழ்வுகளாக இருக்காது என்பது மட்டும் தெளிவாகிறது.
டெல்டாவிற்கும், கப்பாவிற்கும் உள்ள வேறுபாடு
இந்த இரண்டு மாறுபாடுகளும் B.1.617 என்ற ஒரே வம்சாவளியைச் சேர்ந்தவைகளாகும். இவை 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆர்வத்தின் மாறுபாடாக இருந்த டெல்டா மாறுபாடு, 2021 ஆம் ஆண்டு மே மாதம் கவலையின் மாறுபாடாக மாறியது. மறுபுறம் கப்பா மாறுபாடு ஏப்ரல் 4 ஆம் தேதி ஆர்வத்தின் மாறுபாடாகவே இருந்தது.
இதில் டெல்டா உலகெங்கிலும் பரவி அச்சுறுத்தலாக உருவெடுத்து, பல சேதங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையில் பேரழிவு ஏற்பட காரணமே டெல்டா மாறுபாடாகும். அதன் பின் டெல்டா பிளஸ் எனப்படும் டெல்டாவின் மற்றொரு பிறழ்வு இந்தியா உட்பட பல நாடுகளில் உருவெடுத்துள்ளது.
தடுப்பூசிகள் கப்பா மாறுபாட்டிற்கு எதிராக செயல்படுமா?
கப்பாவில் L452R பிறழ்வு உள்ளதால், இது உடலின் இயற்கையான நோயெதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த பிறழ்வு குறித்த ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. மேலும் உறுதியான தரவு எதுவும் கிடைக்கவில்லை. இருந்தாலும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், கோவாக்சின் தடுப்பூசி கப்பா மாறுபாட்டிற்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது என்று கூறுகிறது. அதேப் போல் கோவிஷீல்டு தடுப்பூசியும் கப்பா மாறுபாட்டில் இருந்து பாதுகாப்பளிப்பதாகவும் கூறுகிறது.
முடிவு
எதுவாயினும், சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளான மாஸ்க்குகளை அணிவது, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது போன்ற பழக்கங்களை தவறாமல் பின்பற்ற வேண்டும். மேலும் தவறாமல் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும். தற்போது இவைகளைத் தவிர சிறந்த தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் இல்லை.