சென்னை: ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு அமைந்த பிறகு, பல்வேறு கட்சிகளில் இருந்தும் முக்கிய தலைவர்கள், திமுகவில் வந்து இணைந்த வண்ணம் இருக்கிறார்கள்.
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியில் செயல்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன், திமுகவில் இணைந்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் நம்பிக்கை நட்சத்திர வேட்பாளர்களாக விளங்கிய மகேந்திரன் மற்றும் பத்ம பிரியா ஆகியோர் முதல்வர், ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். திமுகவில் இணையும் பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் எண்ணிக்கை இவ்வாறு நீண்டு கொண்டே செல்கிறது.
முன்னாள் அமைச்சர் நடராஜன்
இப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்து பிறகு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்த வ.து. நடராஜன் ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார். இவர் 2001-2006 ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே அமைச்சராக இருந்த சீனியராகும். இவரை தவிர, அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஒரத்தநாடு சேகர் போன்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். சுமார் 7 மாவட்டங்களை சேர்ந்த மாற்று கட்சியினர் 300 பேர் திரளாக திமுகவில் இணைந்துள்ளனர்.
டிடிவி தினகரன் கட்சி நிலைமை
நடராஜனின் மகன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக உள்ளார். அவர் பெயர் வ.து.ந. ஆனந்த். இவரும் இன்று தனது தந்தை நடராஜனுடன் திமுகவில் இணைந்து கொண்டார். அமமுக ஏற்கனவே கரைந்து கொண்டு செல்கிறது. இப்போது உருகும் வேகம் இன்னும் அதிகரித்து இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
கரையும் அமமுக
கடந்த சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி எந்த ஒரு இடத்திலும் வெற்றி பெற முடியவில்லை. தீவிர அரசியலில் இருந்து டிடிவி தினகரன் ஒதுங்கி இருக்கிறார். அந்த கட்சிக்கு சசிகலா ஆதரவும் இல்லை. அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்பதுதான் சசிகலா குறிக்கோளாக இருக்கிறது. எனவே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியில் தொடர்வது தங்கள் எதிர்காலத்துக்கு நல்லது இல்லை என்பதால் காற்று இருக்கும் போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்ப அவர்கள் பிற கட்சிகளில் இணைந்து வருகிறார்கள்.
திடீர் திருப்பம்
இதில் எதிர்பார்க்காத திருப்பம் தான் தனது கோட்டை என்று நினைத்துக் கொண்டிருக்கும் தஞ்சை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நிர்வாகிகள் இன்று திமுகவில் இணைந்து இருக்கக்கூடிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
சசிகலா சேர்ந்தாலும் தேறாது
திமுகவில் இணைந்த பிறகு பேட்டியளித்துள்ள, நடராஜன், அதிமுக உடைந்த பானை.. சசிகலா அங்கு சேர்ந்தாலும் கூட அந்த கட்சி தேறாது.. அதிமுகவை எடப்பாடிபழனிசாமி ஒரு கம்பெனி போல நடத்தி வருகிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.